ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் நேரில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பேச்சு என்ற பெயரில் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் விரைவில் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது எனச் செய்தி வெளியாகியிருந்தது.
கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாகப் பதவியேற்று இரு வருடங்கள் கடந்துள்ள போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இதுவரை உத்தியோகபூர்வ சந்திப்பு எதையும் நடத்தவில்லை.
கடந்த வருடம் ஜனாதிபதி செயலகத்தால் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் அது இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மாத இறுதி வாரத்தில் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சு ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோது,
“பேச்சுக்கான உத்தியோகபூர்வ அழைப்பு எமக்கு இதுவரை வரவில்லை. எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் நேரில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது.
பேச்சு என்ற பெயரில் காலத்தை வீணடிக்க நாம் விரும்பவில்லை. இந்த விடயத்தை, ஜனாதிபதி எம்மைப் பேச்சுக்கு அழைக்கின்றபோது நேரில் தெரிவிப்போம்.
அர்த்தபுஷ்டியான பேச்சுக்கு நாம் திறந்த மனதுடன் தயாராக இருக்கின்றோம். நிரந்தர அரசியல் தீர்வுக்கு வழியமைக்கும் வகையில் அந்தப் பேச்சு இடம்பெற வேண்டும். அதைவிடுத்து நாம் இனியும் ஏமாறத்தயாரில்லை. அனைத்துக் கருமங்களும் நல்லபடி அமைய வேண்டும் என்பதே எமது விருப்பம்” – என்றார்.