ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக பலவீன நிலைமைக்கு கொண்டு சென்றுள்ள அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால், (Ranil Wickramasinghe) கட்சியில் இளைஞர்களை கொண்ட மூன்றாவது அணியை உருவாக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.
சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
விக்ரமசிங்க கடந்த 27 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்கின்றார். அவர் புதியவர்களுக்கு வாய்ப்பை வழங்கி இருந்தால் கடந்த பொதுத் தேர்தலில் ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை பெற முடியாத அளவுக்கு மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரித்திருக்கமாட்டார்கள்.
அரசியல் அமைப்பில் வேறு ஒரு தலைவராக இருந்திருந்தால், அந்த காலத்திலேயே இளையவர்களை கொண்ட முதல், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது அணிகளை உருவாக்கி இருப்பார்.
இவ்வாறு செய்யும் இயலுமை ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கவில்லை. அவர் தோல்வியடைந்த தலைவர். இளைய தலைமுறையினரை கொண்ட இரண்டாம், மூன்றாவது அணிகளை உருவாக்கி இருந்தால், ஐக்கிய தேசியக் கட்சி இந்தளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்காது.
ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அவர் கூறுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க காலத்திற்கு காலம் பல்வேறு கதைகளை கூறக் கூடிய திறமைசாலி எனவும் அவர் கூறிய பல கதைகளை அவர் நடைமுறைப்படுத்தியதில்லை என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.