ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) கொள்கை விளக்க உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம் கூறுங்கள் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் (Basil Rajapaksa) முகத்துக்கு நேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (R.Sampanthan) கூறினார்.
இன்று (18-01-2022) செவ்வாய்க்கிழமை காலை 9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத் தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது, அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பில் தகவல் வெளியிட்ட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்த்து,
ஜனாதிபதியின் பேச்சை செவிமடுத்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அதையொட்டி இன்று பெரும் கோபம் கொண்டார். பேச்சு முடிந்த கையோடே எழுந்து நாடாளுமன்றில் பகிரங்கமாகத் தம் எதிர்ப்பை பதிவு செய்ய அவர் விரும்பினார். அதற்காக எழுந்தார்.
எனினும், யோசித்தவர், நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி நடக்கக் கூடாது என்பதற்காக அப்படி கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்துக் கொண்டார்.
ஆனால், நாடாளுமன்றை விட்டு வெளியே வரும்போது ‘லொபி’யில் தமக்கு முன்னால் எதிர்ப்பட்ட நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் தமது கோபத்தை சம்பந்தன் ஐயா காட்டினார். ஜனாதிபதியின் இந்தப் பேச்சு வெறும் குப்பை. உருப்படியாக இதில் எதுவும் இல்லை.
இதைப் போய் அவரிடம் சொல்லுங்கள். நான் தேநீர் உபசாரத்துக்கு வரவில்லை. வந்தால் இதை நானே அவருக்கு நேரடியாகக் கூற வேண்டியிருக்கும். அப்படி வேண்டாம் என்பதற்காகத்தான் தேநீர் உபசாரத்தையே தவிர்த்துக் கொண்டிருக்கின்றேன்.
இந்தப் பேச்சு வெறும் குப்பை தவிர வேறு எதுவுமில்லை என்பதை நான் கூறினேன் என்பதை அவரிடம் போய்ச் சொல்லுங்கள். எங்களுடைய நாட்டின் தேசிய பிரச்சினை குறித்து ஏதும் இந்தப் பேச்சில் சொல்லப்படவில்லை.
இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உங்களுக்கு எதுவும் சரிப்பட்டு வராது. உருப்படவே மாட்டீர்கள் என்பதை அவரிடம் போய்ச் சொல்லுங்கள்’ என்று சம்பந்தன் (R.Sampanthan) சீற்றத்துடன் கூறினார்.
இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத பசில் ராஜபக்ஷ விடயத்தைச் சமாளித்து, ‘தாங்க்யூ, தாங்க்யூ…!’ என்று கூறி அங்கிருந்து அகன்றார் என சுமந்திரன் எம்.பி தகவல் வெளியிட்டுள்ளார்.