ஸ்காட்லாந்திலுள்ள Ayrshire என்ற இடத்தில், நிலத்திலிருந்து வெளியாகும் எரிமலைக் குழம்பு போன்ற பொருள் உள்ளூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அந்த நிலப்பகுதி பிளந்து, அதிலிருந்து எரிமலைக் குழம்பு போன்ற பொருள் புகையுடன் வெளியாகிவருகிறது.
இதனால், அது என்ன என்று பார்க்கச் செல்லும் இளைஞர்கள் அதன் அருகில் கால் வைக்கும்போது நிலம் உள்வாங்கி அவர்கள் அதற்குள் விழுந்துவிடலாம், சிறுவர்கள் யாராவது அதற்குள் தவறி விழுந்து உயிரிழக்கலாம் என்று உள்ளூர் மக்கள் அஞ்சுகிறார்கள்.
ஆகவே, அப்பகுதிக்கு மக்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
இதற்கிடையில், அந்தப் பகுதி சுமார் மூன்றரை ஆண்டுகளாகவே எரிந்துகொண்டிருப்பதாக சிலர் தெரிவிக்கிறார்கள். அது பயன்பாட்டில் இல்லாத ஒரு நிலக்கரிச் சுரங்கமாம். எந்த குளிர் காலத்திலும், பனி பெய்தாலும், அது எரிந்துகொண்டேதான் இருக்குமாம்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர்கள் தங்களுக்கு அது குறித்துத் தெரியும் என்றும், போன கோடையின்போதே தங்களுக்கு அது குறித்து தகவலளிக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட பகுதியைச் சுற்றி வேலியடைக்கப்பட்டதாகவும், ஆனால், அதை யாரோ அகற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், அப்பகுதி மக்களோ நடவடிக்கை எடுக்கப்படும் முன், அந்த எரியும் நிலக்கரிச் சுரங்கத்தில் யாராவது சிறுவர்கள் விழுந்துவிட்டால் என்ன ஆவது என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.