நாடளாவிய ரீதியில் 2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நடைபெற்றது.
புலமை பரிசில் பரீட்சை குறித்து பல்வேறு பிரச்சினைகள் பதிவாகியுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன தெரிவித்துள்ளார்.
சில பரீட்சை மத்திய நிலையங்களில் நீண்ட நேரத்திற்கு பின்னர் பரீட்சை வினா தாள்கள் வழங்கப்பட்ட போதிலும்,விடை எழுதுவதற்கான நேரத்தை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன்,சில பரீட்சை நிலையங்களில் சுவர் கடிகாரம் காட்சிப்படுத்தப்படவில்லை எனவும்,விடை எழுதுவதற்கு தாள்கள் வழங்கப்படவில்லை எனவும், மேற்பார்வையாளர்கள் பக்கச்சார்பாக செயற்பட்டதாகவும் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில்,மாணவர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் 255062 மாணவ,மாணவியரும், தமிழ்மொழி மூலம் 85446 மாணவ மாணவியரும், பரீட்சைக்காக தோற்றியுள்ளதுடன், 2943 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும்,எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நம்பிக்கை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.