மீண்டும் விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பிலான அடுத்த கட்டம் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை இதுவரைக்கிடைக்கவில்லை என பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
கடந்த (28-01-2022) ஆம் திகதி வெள்ளியன்று இது குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவினரால் இந்த விடயம் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.
இதன்போது நீதிமன்றில் ஆஜரான திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவின் அதிகாரி, இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணை நிறைவு செய்யப்பட்டு, கோவை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த மேலதிக ஆலோசனைகள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
இதனை அடுத்து குறித்த மனுவை எதிர்வரும் ஜூன் 10-05-2022 ஆம் திகதிவரை ஒத்தி வைத்த நீதிமன்றம் அன்றைய தினம் வழக்கின் முன்னேற்றம் தொடர்பிலும் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்று மன்றுக்கு அறிக்கையிட பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
கடந்த (2018 .07.02) ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைப் பெற்ற அரச நிகழ்வொன்றில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இரஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன், இனங்களுக்கு இடையில் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையிலான உரையினை நிகழ்த்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு இந்த முறைப்பாடுகள் அளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.