எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பாம் எண்ணெய் கலந்த தேங்காய் எண்ணெயை சந்தைக்கு வெளியிட மோசடி வர்த்தகர்கள் குழுவொன்று தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.
பண்டிகைக் காலம் காரணமாக அடுத்த சில மாதங்களில் உற்பத்தி செய்வதற்கு போதுமான அளவு தேங்காய்கள் இல்லாமையினால், தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனவே, இந்த மோசடி முயற்சியை அரசாங்கம் தடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர், மேலும் தெரிவிக்கையில், “பாம் எண்ணெய் இறக்குமதியாளர்கள் தேங்காய் எண்ணெயுடன் பாம் எண்ணெயை கலந்து விஷ தேங்காய் எண்ணெயை மக்களுக்கு வழங்குவதாக வெளியான தகவலை அடுத்து பாம் எண்ணெய் இறக்குமதிக்கு அதிக வரியும், தரமான தேங்காய் எண்ணெய்க்கு குறைந்த வரியும் ஜனாதிபதி அண்மையில் விதித்துள்ளார்.
இதனால் இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனினும் தற்போது தரமான எண்ணெயின் விலையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த மோசடி நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசாங்கம் எண்ணெய் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.