வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல்போன நிலையில், முறைப்பாடு கிடைத்து இரண்டு மணி நேரத்தில் பொலிஸார் அதிரடியாக செயற்பட்டு சந்தேகநபரை கைது செய்து மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வைத்தியசாலைக்கு காலையில் சிகிச்சைக்காக வந்த நபரொருவர் தனது மோட்டார் சைக்கிளை வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்திவிட்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இன்று காலை 10.30 இற்கு மீண்டும் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனையடுத்து தனது மோட்டார் சைக்கிளை பல பகுதிகளிலும் தேடிய பின் மாலை 3.30 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்று மாலை 4 மணியளவில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி ஜெயக் கொடி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜெயான் ரணவீர தலைமையில், பொலிஸ் சார்ஜன்ட் திஸாநாயக்கா, பொலிஸ் கான்டபிள் தயாளன் ஆகியோர் துரித விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விசாரணைகளின் அடிப்படையில் வவுனியா வைத்தியசாலையில் காவலாளியாக கடமை புரிந்த புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் காணாமல்போன மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் விசாரணையின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.