சுவிட்சர்லாந்தின் புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக இலங்கை தமிழ் யுவதி சுபா உமாதேவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் பிரபல நிதி நிறுவனமான ஆதா (Aadaa) நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் , முனைவர் கல்லாறு சதீஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழகத்தின் முன்னனி பத்திரிகையின் இணைப்பிதழில் அட்டைப்படக் கட்டுரையுடன் சுபா உமாதேவன் சிறப்பித்துள்ளது.
35 வயதான சுபா உமாதேவன், மூன்று ஆண்டுகள் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட சர்வதேச அமைப்பின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
ஜெனிவா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்கள் மற்றும் சர்வதேச சட்டம் தொடர்பான சிறப்பு முதுகலை பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.கனடாவின் ஒட்டாவாவில் அமைந்துள்ள சர்வதேச கற்கைகள் மற்றும் நவீன மொழிகள் தொடர்பான பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.
பெண் வர்த்தகர்களுக்கான சர்வதேச அமைப்பின் சட்ட ஆலோசகராக பணியாற்றி வரும் சுபா உமாதேவன், யுனைஸ்கோ அமைப்பு ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் மேற்கொண்டு வரும் சர்வதேச திட்டங்களுக்கு தலைமை தாங்கி வருகிறார். தனது புதிய பதவி தனது இதயத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் சார்ந்தது என சுபா உமாதேவன் கூறியுள்ளார்.
இலங்கையிலிருந்து இரண்டு வயதில் பெற்றோருடன் சுவிஸ் வந்த சுபா, கல்வியில் சிறந்தார்,பெற்றோரை வணங்கினார், சமூகத்தை,மனிதத்தை நேசித்துள்ளார்.
தனக்கு வாழ்வு தந்த தேசத்தை மதித்தார்.உலக மானுடத்தை நேசித்தார். பல்கலைக்கழகங்களில் இளமாணி,முதுமாணிப் பட்டங்களைப் பெற்று சுவிஸ்தேசம் போற்றும் பெண்ணாக இன்று உயர்ந்துள்ளார்.தமிழ் மக்கள் நடாத்துகின்ற அதிக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
அத்துடன் , ஐந்து மொழிகளில் சரளமாக உரையாற்றும் இவர் , பல மில்லியன் பணத்தை நிர்வகிக்கும் ஒரு சர்வதேச நிறுவனத்தின் நிறைவேற்றும் பணிப்பாளராகப் பணியாற்றுகிறார். அது மட்டுமல்லாது சுபா உமாதேவன், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலிருந்து சில நாடுகள் மற்றும் போராட்ட இயக்கங்களுடனான பேச்சுவார்த்தையில் இராஜதந்திரியாகக் கலந்து கொள்கிறார்.
இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல் எமது சமூகத்திலிருந்து தோன்றிய சுபா உமாதேவன் தற்போது சுவிட்சர்லாந்தின் புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் ‘தேவதை’யின் அட்டைப்படக் கட்டுரையுடன் சுபா உமாதேவனின் உயரங்களைப் பேசியதானது,புலம்பெயர் தமிழர்களின் உயர்வுகளுக்கு தமிழகத்திலும் கிடைக்கும் அங்கீகாரமாகும்.
இந்நிலையில் புலம் பெயர் தமிழர்களை பெருமைப்படவைத்த சுபா உமாதேவனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.