பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் இலங்கையில் உள்ள அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் திட்டமிட்ட பண கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது சம்பந்தமாக விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் நேற்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
25 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான 12 லட்சத்துத்திற்கு மேற்பட்ட அமெரிக்க டொலர்களை மோசடியான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் சட்டவிரோதமான சொத்துக்கள் தொடர்பான பிரிவின் அதிகாரிகள் இதனை நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட இரண்டு பேர் வெளிநாடு செல்ல தடைவிதிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான், புத்திக ஸ்ரீ ராகல, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் ஜீ.வி. ரவிப்பிரிய செய்த முறைப்பாட்டுக்கு அமைய குற்றவியல் விசாரணை திணைக்களம் இந்த விசாரணைகளை ஆரம்பித்தது.
பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில், கொழும்பில் உள்ள வர்த்தக நிலையங்களின் பெயர்களில் இலங்கையில் உள்ள டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ள போதிலும் சந்தேக நபர்கள், இலங்கைக்கு பொருட்களை எதினையும் இறக்குமதி செய்யவில்லை எனவும் குற்றவியல் விசாரணை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட டொலர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய பணச் சலவை சட்டத்தின் கீழ் விசாரணைகளை நடத்தி வருவதாக திணைக்களத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்வைக்கப்பட்ட வாதங்கள் பிரதிவாதங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதவான், விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.