திருகோணமலை பொது மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரியூட்டும் சுடலை பழுதடைந்துள்ளதால் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
நாட்டில் தற்போது கோவிட் 19 தொற்று அதிகரித்து வரும் வேளையில் மரணங்களும் அதிகளவில் சம்பவிக்கின்றன.
ஆனாலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கோவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலத்தை பொலநறுவை பிரதேசத்திறகு தனியார் வாகனங்களில் கொண்டு சென்று எரியூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் திருகோணமலை நகராட்சி மன்றத்தினால் கண்காணிக்கப்பட்டு வந்த இந்த எரியூட்டும் சுடலை பல நாட்களாக சேதமடைந்து காணப்படுவதாகவும் இதனை புனரமைப்பதற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஆனாலும் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய்-திருகோணமலை போன்ற இடங்களில் எரியூட்டும் சுடலை இருந்தபோதிலும் இரண்டு இயந்திரங்களும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் இதனால் சடலங்களை எரியூட்டுவதற்கு வவுனியா அல்லது பொலநறுவை போன்ற பிரதேசத்திற்கு கொண்டு செல்வதாகவும் இதனால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆகவே திருகோணமலை நகர சபையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன எரியூட்டும் சுடலையை மிக விரைவாக புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.