உலகில் கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தும் சர்ச் எஞ்சின் என்றால் அது கூகுள் தான். கூகுள் இல்லாத இணையத்தையே பயன்படுத்த முடியாத அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
ஆனால், என்னதான் கூகுள் பாதுகாப்பான சர்ச் எஞ்சின் என்றாலும் சில குறைபாடுகள் இருக்க தான் செய்கிறது. அந்த வகையில், சில கோடிங் குறைபாடுகள், அல்லது அப்டேட் செய்ய வேண்டிய பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கும்.
இதுபோன்ற குறைபாடுகளை தீர்க்க கூகுள் நிறுவனம் அடிக்கடி கோடிங்கை அப்டேட் செய்து வரும். சில நேரங்களில் கூகுள் பயனாளிகள் சிலரும் கூட கூகுளில் இருக்கும் இது போன்ற குறைபாடுகளை கண்டுபிடித்து அதை சொல்வது உண்டு.
அதாவது உங்கள் ஆப்பில் இந்த மாதிரியான பிரச்சனை உள்ளது, அதை சரி செய்யுங்கள் என கூறுவார்கள். அந்த வகையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ரித்துராஜ் சவுத்திரி என்ற 19 வயது பொறியல் மாணவர் கூகுளில் இருக்கும் குறைபாடு ஒன்றை கண்டுப்பிடித்துள்ளார்.
மணிப்பூர் ஐஐடியில் படிக்கும் இவர், இந்த பிழை மூலம் கூகுளில் ஹேக்கிங்-இல் ஈடுபடும் சமூக விரோதிகள் எளிதாக தாக்குதல்கள் நடத்தி இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உடனே கூகுள் நிறுவனம் சோதனை செய்ததில் முடிவில் பிழை இருந்தது உண்மை தான் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பெரிய குறைப்பாட்டை கண்டுப்பிடித்த ரித்துராஜூக்கு கூகுள் நிறுவனம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி அவருக்கு Google Hall of Fame Award என்ற விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும், கூகுள் ஆராய்ச்சியாளர் என்ற பட்டியலில் இவருடைய பெயரை கூகுள் இணைத்துள்ளது.
தற்போது, இவர் P-2 எனப்படும் இரண்டாம் கட்ட குறைபாடுகளை கண்டுபிடித்துள்ளார். P-0 எனப்படும் இதை விட மேம்பட்ட குறைபாடுகளை இவர் கண்டுபிடிக்கும் பட்சத்தில் அவருக்கு கூகுளில் பணி அல்லது அன்பளிப்புகள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.