பிரசவத்துக்குப் பிறகு மன அழுத்தம் ஏற்படும் பெண்களுக்கு வாழ்க்கையின் பின்னாள்களிலும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளது’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
வாழ்வியல் மாற்றம், பணிச்சுமை, பரபரப்பு இவையெல்லாம் மன அழுத்தத்தை ஏற்படுத்துவது தெரியும். குழந்தை பிறப்புகூட பெண்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? `பிரசவத்துக்குப் பின்னர் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அல்லது மன உளைச்சல்’ (Postpartum Depression) இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் பத்து லட்சம் தாய்மார்களை பாதிக்கும் கொடுமையான நோய். இதில் கொடுமை என்னவென்றால், பத்து பெண்களுக்கு இருப்பதாகக்கூட பதிவாகாத நோய். `பிரசவத்துக்குப் பிறகு மன அழுத்தம் ஏற்படும் பெண்களுக்கு வாழ்க்கையின் பின்னாள்களிலும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளது’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
“பிரசவத்துக்குப் பின்னர் ஏற்படும் மன அழுத்தம் என்றால் என்ன?’’
“பிரசவத்துக்குப் பின்னர் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்; உடல் தோற்றத்திலும் சில மாற்றங்கள் ஏற்படலாம். இதன் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். இதைத்தான் `பிரசவத்துக்குப் பின்னர் ஏற்படும் மன அழுத்தம்’ (Postpartum Depression) என்கிறோம். குழந்தை பிறந்த முதல் இரண்டு வாரத்துக்குள் ஏற்படும் லேசான வகை மன அழுத்தத்தை `பேபி புளூஸ்’ (Baby Blues) என்கிறோம்.
இந்த வகை மன அழுத்தம் அளவுக்கு அதிகமாக, பிற மன நோய்களுடன் ஏற்பட்டால், அதை `குழந்தை பிறப்புக்குப் பின்னர் ஏற்படும் சைகோசிஸ்’ (Postpartum Psychosis) என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குழந்தையைக் கொல்லக்கூடிய அளவுக்கு மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்கள்.
சில பெண்களுக்கு குழந்தை வயிற்றில் இருக்கும்போதே மன அழுத்தம் ஏற்படும். `இதை கர்ப்பக்கால மன அழுத்தம்’ (Prepartum Depression) என்கிறோம்.’’
“இது யாருக்கெல்லாம் ஏற்படும்?’’
“ஏற்கெனவே மன அழுத்தம் போன்ற மன நோய்கள் இருப்பவர்கள், வீட்டில் சரியான துணை இல்லாமலிருப்பவர்கள், முன்னர் பிறந்த குழந்தைகள் இறந்து போயிருத்தல் அல்லது கரு கலைந்திருத்தல் போன்ற பாதிப்புகளை அனுபவித்தவர்களுக்கு, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.’’
“இந்த மன அழுத்தம் ஏற்படக் காரணங்கள் என்னென்ன?’’
“சில தாய்மார்கள் தன் குழந்தைக்கு உலகத்தில் வேறு யாரும் கொடுக்காத அளவுக்கு சிறந்த பராமரிப்பை கொடுப்பதை லட்சியமாக வைத்திருப்பார்கள். அதைச் செய்ய முடியாமல் போகும்போது இந்த வகை மன அழுத்தம் ஏற்படலாம். குழந்தை பிறந்த பின்னர் தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் இதற்கு முக்கியக் காரணம்.
மேலும், நம் வீட்டிலுள்ள சில பெரியவர்கள் `நாங்க அந்தக் காலத்துல இப்படியெல்லாம் செய்யலை’, `எனக்கெல்லாம் எதுவும் ஆகலை’, `நான் நாலு பிள்ளைகளைப் பெத்தவ… எனக்குத் தெரியாதா?’ என்றெல்லாம் எதையாவது சொல்லி துளைத்தெடுப்பர்கள். இது போன்ற பிரச்னைகள்தான் பெரும்பாலும் மாமியார்-மருமகள் சண்டைக்கான முதல் புள்ளியை தோற்றுவிக்கின்றன.
குழந்தையின் மேல் பிறர் எவ்வளவு பாசம் வைத்திருந்தாலும், தன் பாசம்தான் பெரியது என நினைக்கும் தாய்மார்கள், குழந்தையைப் பிறர் தொட்டுத் தூக்குவதைக்கூட விரும்ப மாட்டார்கள்.
நம் ஊரில் இவை எல்லாவற்றையும்விட பெரிய பிரச்னை ஒன்று இருக்கிறது. அது, பெண் குழந்தை பிறப்பதை பெரும்பான்மையோர் விரும்பாமை… அதற்கு அந்தத் தாயையே குறை சொல்லி கொடுமைப்படுத்துவது… என மன உளைச்சல் ஏற்படப் பல காரணங்களை அடுக்கலாம்.’’
“இதை எப்படிக் கண்டறிவது?’’
“இதன் அறிகுறிகளைக் கொண்டு கண்டறிந்துவிடலாம். தூக்கமின்மை, பசியின்மை, வெறுப்புஉணர்வு அதிகமாதல், குழந்தையுடனான பிணைப்பு குறைந்து போவது… போன்றவற்றைக்கொண்டு மன அழுத்தம் இருப்பதைக் கண்டறிந்துவிடலாம்.’’
தாயின் உணர்வுகளிலும் சில மாற்றங்கள் ஏற்படும். கோபம், பதற்றம், குற்றவுணர்வு, நம்பிக்கையின்மை, தனிமை, வெறுப்பு, சோகம் போன்றவை அதிகமாகும்.
பழக்க வழக்கங்களிலும் மாறுதல் ஏற்படும். காரணமின்றி அழுதல், எரிந்துவிழுதல், ஓய்வின்றி எதையாவது செய்துகொண்டே இருத்தல், தனிமையை விரும்புதல்… இவையெல்லாம் ஏற்படும்.
தூக்கமின்மை, தீய கனவுகள் தோன்றுவது, தூங்கவே விரும்பாமை ஆகியவையும் இருக்கும்.
இவை மட்டுமின்றி கவனிக்கும் திறன் குறைதல், பொறுமையும் நிதானத்தையும் இழத்தல், பசியின்மை அல்லது உடல் எடை அதிகரித்தல் ஆகியவையும் ஏற்படலாம்.’’
“எப்படி குணப்படுத்தலாம்?’’
“குழந்தை பிறப்புக்குப் பின்னர் ஏற்படும் மன அழுத்தம் சில மணி நேரங்களில், சில நாள்களில், சில மாதங்களில் எந்தச் சிகிச்சையுமின்றித் தானாகவே சரியாகலாம். ஆனாலும், அதன் தீவிரத் தன்மையைப் பொறுத்து அதற்கான சிகிச்சைகள்… கலந்தாய்வு, மருந்துகள், ஹார்மோன் சிகிச்சை என மாறும். பெரும்பாலான தாய்மார்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஓர் உரையாடலே போதுமானது.
இதனைப் பெற மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை. உடனிருப்பவர்கள் அந்த நிலைமையை உணர்ந்து துணையாக நின்று ஆறுதலாக இருந்தாலே போதும். குழந்தை பிறந்த பின்னர் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் இதர பிரச்னைகள் தொடர்பான தகவல்களையும், அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் கணவரும் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அறிந்து வைத்துக்கொண்டு, பெண்ணுக்கு பக்கபலமாக இருக்கத் தயாராக வேண்டும்.
ஏற்கெனவே இந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள், மருத்துவர்கள், கலந்தாய்வு வழங்குபவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து ஒரு குழுவை உருவாக்கலாம். இவர்கள், இப்போது பாதிப்பில் இருப்பவர்கள், பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் ஆகியோருக்கு உதவ முன்வர வேண்டும். சிறு பிரச்னையாக இருந்தாலும், ஆறுதல் தரும் பேச்சும், `சரியாகிவிடும்’ எனும் நம்பிக்கை தரும் வார்த்தைளையும் பகிர இந்த குழுக்கள் உதவியாக இருக்க வேண்டும்.
இந்த குழுக்கள் பற்றி அறிந்துகொள்ளவும், அவற்றில் இணைவதற்கான உதவிகளும் எளிமையாக அனைவருக்கும் கிடைத்தால், அது இன்னும் சிறப்பு. குழந்தை பிறந்த பின்னர் கணவரின் வீட்டுக்கு பதிலாக தாயாரின் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு இந்த வகை மன அழுத்தம் மிகக் குறைவாகவே ஏற்படுகிறது.’’