கனடாவில் ஒருபோதும் பயன்படுத்தப்படாத அவசரகாலச் சட்டத்தை தனது அரசாங்கத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்குவதற்காக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பயன்படுத்தியுள்ளார்.
இந்த அவசரகாலச் சட்டம் ட்ரூடோவின் அரசாங்கத்திற்கு 30 நாட்களுக்கு அசாதாரண அதிகாரங்களை வழங்கும். பொது ஒன்றுகூடல், பயணம் மற்றும் குறிப்பிட்ட சொத்துக்களை பயன்படுத்துவது உள்ளிட்டவைகளை இதன்மூலம் கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக பல வாரங்களாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் என்றால் என்ன?
1988 இல் நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டம், தேசிய நெருக்கடி காலங்களில் அரசாங்கத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.
“கனேடிய நாட்டவர்கள் உயிர்கள், உடல்நலம் அல்லது பாதுகாப்பிற்கு தீவிரமாக ஆபத்தை விளைவிக்கும்” “அவசர மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.
அவசரகாலச் சட்டம் நான்கு வெவ்வேறு வகையான அவசரநிலைகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. அவையாவன, பொதுநல அவசரநிலைகள், பொது ஒழுங்கு அவசரநிலைகள், சர்வதேச அவசரநிலைகள் மற்றும் போர் அவசரநிலைகள் ஆகும்.
இதன்படி, இந்த வாரம் கனடாவில் அவசரகாலச் சட்டம் செயல்படுத்தப்பட்டால், அது ‘பொது ஒழுங்கு’ வகையின் கீழ் இருக்கலாம். இங்கே அளவுகோல் கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அவசரகாலச் சட்டம் என்ன அதிகாரங்களை வழங்குகிறது?
இச்சட்டத்தின் கீழ், அரசாங்கம் அதன் வசம் பல தொலைநோக்கு அதிகாரங்களைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, நாடாளுமன்ற அல்லது முக்கிய எல்லைக் கடப்புகளில் இருந்து – குறிப்பிட்ட பகுதிகளுக்கு அல்லது அங்கிருந்து செல்லும் பயணத்தை அரசாங்கம் தடை செய்யலாம்.
சில பகுதிகளில் இருந்து மக்கள் மற்றும் தனிப்பட்ட உடைமைகளை வெளியேற்ற உத்தரவிடலாம், எதிர்ப்பாளர்களின் நெரிசலான பகுதிகளை அகற்ற இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும்.
மேலும் இது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்த முடியும்.
கனடாவில் வலுக்கும் போராட்டம்
கோவிட் தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டாவில் தொடங்கியுள்ள இந்தப் போராட்டம் அருகே உள்ள நகரங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.