பொது செயற்பாட்டாளர் செஹான் மாலக்க கைது செய்யப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரம தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் சர்வதேச ரீதியில் இலங்கையின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரித்துள்ளார்.
கர்தினாலின் இந்த எச்சரிக்கையை கொழும்பு பேராயர் இல்ல உறுப்பினர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அருட்தந்தை மேலும் தெரிவிக்கையில்,
இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நெருங்கியுள்ள நிலையில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவங்கள் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக குரல் கொடுத்த செஹான் மாலிக கைது செய்யப்பட்டதும் மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்கும் ஊடகங்களை தடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதும் வருத்தமளிக்கின்றது.
இந்தநிலையில் அனைத்து பொது மக்களும் ஊடகங்கள் மூலம் உண்மையை அறிந்து கொள்வதால் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் உண்மையை மறைக்கும் முயற்சியாகும்.
அதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.