செவ்வாய் வலிமையற்ற பெண்கள் பலருக்கு திருமணம் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. திருமணம் நடந்த பிறகு திருமணமே செய்யாமல் வாழ்வை கழித்து இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
பெண்களுக்கு மூன்று நிலைகளில் மட்டுமே செவ்வாய் கடுமையான பாதிப்பை தருகிறது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
1. வக்ர செவ்வாய்
செவ்வாய் வக்ரம் பெற்ற பெண்கள் மன நிறைவான மணவாழ்வு அமையவில்லை என்றே கூறுகிறார்கள். இவர்களுக்கு செவ்வாயின் தசாபுத்தி அந்தர காலங்களில் முன் கோபம் மிகுதியாகும். திட்டமிடுதலில்-ஆலோசகராக இருப்பதில் சாதனை புரிவர். ஆனால் செயல்திறன் இருக்காது. உடன் பிறந்த சகோதரர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்காது. வீடு, வாகனம், சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருக்கும். ரத்தம் தொடர்பன நோய்கள் எற்படும். வக்ர செவ்வாய் சனியுடன் சம்பந்தம் பெறும் போது விபத்து / காயம் ஏற்படும்.
பரிகாரம்:- பழனி தண்டாயுதபாணி சுவாமியை வழிபட வாழ்வின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகி மன நிறைவான மண வாழ்க்கை கிட்டும்.
2 . கிரகச் சேர்க்கை
செவ்வாய்+ சனி, செவ்வாய்+ ராகு, செவ்வாய்+ கேது ஆகிய கிரகச் சேர்க்கை திருமண வாழ்வை சிறக்கச் செய்யாது. செவ்வாய் + சனி சனியும் செவ்வாயும் பகை கிரகங்கள் இவர்கள் இருவரும் இணைந்து எந்த வீட்டில் எந்த ராசியில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் பிரச்சினைதான்.
ஜோதிட சாஸ்திரத்திலேயே இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணிதான் மிகவும் சிக்கலானது, சவாலானது ஆபத்தானது. வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மனதில் மட்டுமல்லாமல் உடலிலும் இந்த இருகிரக சேர்க்கை பாதிப்பை உண்டு பண்ணும். குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எந்த வீட்டில் செவ்வாயும் சனியும் சேர்ந்திருந்தாலும், சமசப்தமாய் பார்த்துக் கொண்டாலும் பூப்பெய்துதலில் இருந்து பிரச்சினைகள் தொடங்கும்.
மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்சினை, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, அல்சர், நீண்ட வறட்டு இருமல், ஹீமோக்ளோபின் குறைதல், சிறுநீரகக் கோளாறு, முகத்தில் கண்ணுக்குக் கீழ் கருவளையம் என பல பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படும். கணவன்-மனைவி விவாகரத்துக்கான வாய்ப்புகளையே அதிகம் காட்டும் சேர்க்கை இது. மண வாழ்க்கையில் பிரச்சினையை சந்தேகத்தாலும் பிடிவாதத்தாலும், ஈகோ பிரச்சினையாலும், பொருளா தாரக் குறைபாட்டாலும் உண்டாக்கும். கோர்ட்டில் எனக்கேற்ற துணை இவரல்ல என்று குற்றம்சாட்டி பிரிய வைப்பதெல்லாம் இந்த சேர்க்கைதான்.
செவ்வாய்+சனி கூட்டணியில் வேகம், விரைந்து முடிவெடுத்தல், தன் சுதந்திரத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று நினைத்தல், முரட்டுத்தனம். இவையெல்லாம் செவ்வாய் தரும் குணங்கள். நான் சொன்னா சொன்னதுதான். அவரு வேணா இறங்கி வரட்டும். நான் ஏன் இறங்கிப் போகணும் என்று பேச வைப்பதும் செவ்வாய்தான். சனி என்பது, இதற்கு எதிர்மாறான தன்மைகளைக் கொண்டிருக்கும் கிரகம்.
செவ்வாய் வேகமாகப் பேசி விரைந்து முடிக்கும் கிரகமென்றால், சனி எதிரே இருப்பவரின் பொறுமையைச் சோதிக்கும் அளவிற்கு நிதானம் தரும் கிரகம். சுறுசுறுப்பானவனும் மந்தமானவனும் சேர்ந்தால் எப்படியிருக்கும். செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்கள் எரிமலை போல வேகமாக உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். சனி ஆதிக்கமுள்ளவர்கள் வானமே இடிந்து விழுந்தாலும் எதுவும் நடக்காதது போல் இருப்பார்கள்.
இந்த இரண்டு கிரகங்களுமே ஒரு ஜாதகத்தில் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கையில் அனைத்து சுகங்களையும் அனுபவிக்க முடியும். இந்த கிரகச் சேர்க்கை லக்னம், ஏழாம் வீட்டில் இருந்தால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து தோல்வியை சந்தித்து விவாகரத்துப் பெறுகிறார்கள். பிற வீட்டில் இருந்தால் பெற்றோர் நடத்தும் திருமணமாக இருந்தாலும் திருமண வாழ்க்கை கேள்விக்குறிதான். இந்த அமைப்பு திருமண வாழ்க்கைக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் கணவருக்கு தொழில் நெருக்கடி எப்பொழுதும் கொடுத்துக் கொண்டே இருக்கும்.பெரும்பாலும் எதிர்மறை கதிர்வீச்சையே வெளிப்படுத்தும் சேர்க்கையாகும்.
பரிகாரம்:- திருமணத்திற்கு பின் ஆண், பெண் இருவருக்கும் செவ்வாய், சனி தசை சந்திப்பு இருக்க கூடாது. நரசிம்மர் வழிபாடு இந்த கிரகங்களின் கூட்டணியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் பரிகாரமாகும்.
செவ்வாய் + ராகு ஆண்களுக்கு உடன் பிறந்தவர் களுடனும், பெண்களுக்கு கணவருடனும் மன வேத னையை ஏற்படுத்தும் கிரகச் சேர்க்கை. பல பெண்களுக்கு திருமணத்தை நடத்துவதில் சிரமத்தை தரும். திருமணம் நடந்த பிறகு கல்யாணம் செய்யாமலே வாழ்வை கழித்து இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படியான பகை கிரக சேர்க்கை. எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று கணவரை கவுவரப்படுத்தி சமுதாயத்தில் வலம் வர முயன்று மன நோயை வரவழைக்கும் பெண்களே அதிகம். பெண்களை கடுமையாக பாதித்து கணவரிடம் இருந்து பிரிக்கும். கணவனை பாம்பு என்று தாண்டவும் முடியாமல் பழுது என்று நினைத்து மிதிக்கவும் முடியாமல் வாழ வைக்கிறது.
பரிகாரம்:- செவ்வாய் தசை நடப்பவ ருக்கு ராகு தசை நடப்பவருடன் திருமணம் செய்யக் கூடாது. மாதவிடாய் நின்ற சுமங்கலிப் பெண்களிடம் ஆசி பெற வேண்டும்.
செவ்வாய்-கேது மேஷம், சிம்மம், தனுசில் செவ்வாய் கேது சாரம் பெற்று நின்றால் அல்லது செவ்வாய் , கேதுவுடன் இணைந்து எங்கு நின்றாலும் 27 வயதிற்கு மேல் தான் திருமணம் நடக்கிறது. திருமணம் ஆன பிறகு ஏன் திருமணம் நடந்தது என்று வருந்தும் வகையில் தான் வாழ்க்கை இருக்கும். கணவனை கடும் பகையாளியாக்கி நீதி மன்ற படி ஏறிய பெண்களே அதிகம். வெகு சில பெண்கள் குடும்பம், குழந்தைகள், மானம் , மரியாதைக்கு அஞ்சி அனுசரித்து வாழ்கிறார்கள். வெகு சில தம்பதிகள் விதிவிலக்காக கருத்து வேறுபாடு இன்றி தொழில் நிமித்தம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் வாழ்நாளின் பெரும் பகுதியில் பிரிந்தே வாழ்கிறார்கள்.
பரிகாரம்:- செவ்வாய் தசை நடப்பவருக்கு கேது தசை நடப்பவருடன் திருமணம் செய்யக் கூடாது. செவ்வாய் கிழமை விரதம் இருந்து வீரபத்திரரை வழிபட செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும்.
3. பாவகர்த்தரி தோஷம்
காரக கிரகத்திற்கு இருபுறமும் அசுப கிரகம் நின்று காரக கிரகத்தின் இயக்கத்தை மட்டுப்படுத்தும். உதாரணமாக செவ்வாய்க்கு ஒருபுறம் கேது மறுபுறம் சனி இருந்தால் செவ்வாயின் இயங்கும் தன்மை சனி மற்றும் கேதுவால் தடைபடுத்தப்படும். முதிர்கன்னியானப் பிறகு திருமணம் அல்லது திருமணமே நடக்காத பெண்கள் ஜாதகத்தில் இது போன்ற அமைப்பை காணலாம்.
உண்மையில் செவ்வாய் தோஷம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. பல திருமண புரோக்கர்கள் 10 ரூபாய்திருமணப் பொருத்தம் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு மக்களை படுத்தும் பாடு அளப்பரியது. தவறான செவவாய் தோஷ கணிப்பால் பலரின் வாழ்க்கை கேள்வியாகவே இருக்கிறது. ஒரு ஜாதகத்தை நவகிரகங்களுமே இயக்கும். செவ்வாய் தசை, புத்தி அந்தர காலங்களில் பாதிப்பு அதிகமாகவும் மற்ற காலங்களில் மிதமாகவும் இருக்கும். எனவே செவ்வாய் தோஷம் கண்டு அஞ்சத் தேவை இல்லை.