பெரும் போக நெல் அறுவடை குறைந்துள்ளமை மற்றும் செலவு அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய சுமார் 200 ரூபாவுக்கும் மேல் செலவாகும் என விவாசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இரசாயன பசளைகள் கிடைக்காததால், அறுவடை குறைந்தமையே உற்பத்தி செலவு பெரியளவில் அதிகரிக்க காரணம் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதனை தவிர தற்போது தொழிலாளிகளுக்கான நாள் கூலி 2 ஆயிரத்து 300 ரூபாயாக அதிகரித்துள்ளது. எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதால், ஒரு ஏக்கர் வயலில் நெல்லை அறுவடை செய்ய அறுப்பு இயந்திரத்திற்கு 14 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்த வேண்டியுள்ளது எனவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும் அண்மையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, பசளை இருந்தாலும் இல்லாவிட்டாலும் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த போவதாக கூறியிருந்தார். இந்த நிலையில், நாட்டில் அரிசி உற்பத்தி பாரியளவில் குறைந்து, செலவுகள் பெருமளவில் அதிகரித்துள்ளளது.
ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய 200 ரூபாவுக்கும் மேல் செலவாகும் என விவசாயிகள் கூறும் நிலையில், இதனைவிட அதிக விலை கொடுத்து நுகர்வோர் அரிசியை கொள்வனவு செய்யக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் அரிசிகளுக்கான விலைகளை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் திரும்ப பெற்றது. இதன் காரணமாக அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தமது விருப்பத்திற்கு அமைய அரிசி விலைகளை நிர்ணயித்து வருகின்றனர்.