அடுத்த 24 மணி நேரத்தில் டீசலை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், 15 ஆயிரம் தனியார் பேருந்துகள் பயணிகள் போக்குவரத்துச் சேவையை நிறுத்த நேரிடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குள் 18 ஆயிரம் தனியார் பேருந்துகள் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தூர இடங்களுக்கு செல்லும் பெருந்தொகையான பேருந்துகள் டீசல் இல்லாத காரணத்தினால், சேவையை நிறுத்தியுள்ளன.
எதிர்காலத்தில் அரசாங்கம் டீசல் விலையை அதிகரித்தால், தனியார் பேருந்துகளுக்கு மானிய விலையில் டீசலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் மானிய விலையில் டீசலை வழங்கவில்லை என்றால், விருப்பமின்றியேனும் மீண்டும் ஒரு முறை பேருந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிடும்.
வேறு நாடுகள் பொது போக்குவரத்துச் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டாலும் இலங்கை அரசாங்கம் பொது போக்குவரத்தை கவனத்தில் கொள்ளாது இருக்கின்றது. தற்போதைய நிலைமை தொடர்பாக போக்குவரத்து அமைச்சர், ராஜாங்க அமைச்சர் அல்லது பேருந்து சங்கங்கள் தெளிவுப்படுத்த வேண்டும் என்ற போதிலும் இந்த தரப்பினர் மௌனமாக இருந்து வருகின்றனர்.
அரசாங்கத்திற்கு உரிய வரியை செலுத்தி பொது மக்களுக்கு தனியார் பேருந்து துறையினர் சேவைகளை வழங்கி வருகின்ற போதிலும் அரசாங்கம் எமது பிரச்சினைக்கு தீர்வு காணமல் இருப்பது சிக்கலுக்குரியது எனவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.