இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைகள் அதிகரிப்பு குறித்த செய்தி தொடர்ச்சியாக வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
மேலும், நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளதுடன்,எரிபொருள் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது.
நாடளாவிய ரீதியில் பல எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசல்,மண்ணெண்ணெய் என்பனவற்றினை பெற்றுக்கொள்ள மக்கள் நேர காலமின்றி வரிசையில் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலை தொடர்ச்சியாக காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில்,நீண்ட நேரமாக எரிப்பொருளினை பெற்றுக்கொள்வதற்காக பல மணி நேரம் காத்திருந்த தாய் ஒருவர் கோட்டாபய அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி சவால் விடுத்துள்ள காணொளியொன்று வெளியாகியுள்ளது.
இதன்போது குறித்த தாய், என்னை சுட்டுக்கொன்றாலும் நான் உண்மையை பேசுவதற்கு பயப்படமாட்டேன்! ஒரு குடும்பமே சேர்ந்து முழு நாட்டையும் சீரழிக்கின்றது.
அப்பாவி மக்கள் தினமும் மாவிற்கும்,சீனியிற்கும்,எரிப்பொருளிற்கும் பல மணிநேரம் வீதியில் காத்துக்கிடக்கின்றனர்.சில பெண்கள் குழந்தைகளை சுமந்தவாறு வீதியில் நிற்கின்றனர்.இது ஒரு அரசாங்கமா? கோட்டாபயவை அரசாங்கத்தை விட்டு விலகிச்செல்லுமாறு கூறுங்கள்.
நாட்டை கேட்கும் நல்ல ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு செல்லுமாறு கூறுங்கள்.எனது காலம் முடிந்துவிட்டு எனது பிள்ளைகள் நிம்மதியாக வாழ வேண்டும்.உண்மையை பேச நான் பயப்பட வேண்டிய அவசியமில்லை.என்னை சுட்டுக்கொன்றாலும் பயப்படமாட்டேன் என்றும் அரசாங்கத்திற்கு எதிராக சவால் விடுத்துள்ளார்.