நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த நாட்டை வங்குரோத்து அடையச் செய்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவலட்சணமான அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்ச இந்த நாட்டை சீரழித்துவிட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நாடு வங்குரோத்து அடையவில்லை, வங்குரோத்து அடையச் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச இன்று செல்லாக் காசாக மாறியுள்ளார் எனவும், அவரை ஓரம் கட்டியுள்ளதாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டை தற்பொழுது ஆட்சி செய்வது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ, அல்லது மஹிந்த ராஜபக்சவோ கிடையாது எனவும், நாட்டை பெசிலே ஆட்சி செய்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் சகோதரர்கள் என்ற காரணத்தினால் அவர்கள் நாட்டை சீரழிக்க இடமளித்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.