“நல்லாட்சியில் மக்கள் மூன்று நேரமும் உணவு அருந்தினார்கள். ஆனால், இந்த ஆட்சியில் பட்டினிச்சாவை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
“தேசிய அரசமைக்கும் முயற்சிக்கு எமது கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்பதைத் திட்டவட்டமாக கூறிவைக்க விரும்புகின்றோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மொனறாகலை மாவட்டக் கூட்டம் இன்று (13) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சர்வதேசத்துடன் நல்லுறவு இருக்கவில்லை. ஐ.நா. அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தினர்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்திருந்தபோது, அமைச்சர் ஒருவரே அவருக்குத் திருமண அழைப்பிதழை விடுத்தார்.
எனினும், நல்லாட்சியில் சர்வதேசத்துடனான உறவை பலப்படுத்தினேன். சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றேன். நல்லாட்சியில் மக்கள் மூன்று நேரமும் உணவு அருந்தினார்கள். உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. மக்கள் வீதிகளில் வரிசைகளில் நிற்கவில்லை. இந்த ஆட்சியில் எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. பட்டினிச்சாவை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.