ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரால் ஜயனாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் இலங்கை எதிர்நோக்கக்கூடிய மிகப் பெரிய சவால் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 51ம் அமர்வுகள் நடைபெறவுள்ளதாகவும், இதில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்படுமா அல்லது புதிய தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்பதே மிகப் பெரிய கேள்வியாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.