உக்ரைன் மீது ரஷ்யா 31 ஆவது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு அஞ்சி உக்ரைனின் கார்கீவ் நகர மக்கள் பாதாள அறைகளில் பதுங்கியுள்ளனர்.
இந்நிலையில், உக்ரைன் படையெடுப்பில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளில் பெரும்பாலானவை இலக்கை எட்டவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவே உக்ரைனில் ரஷ்யா கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது எனவும், அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நான்கு வாரங்கள் கடந்து நீடித்து வருகின்றது.
ரஷ்ய துருப்புகள் உக்ரைன் நகரங்களை மொத்தமாக சிதைத்து வருகின்றனர். ஆனால், ரஷ்யா துருப்புகளின் பின்னடைவிற்கு காரணம், உக்ரைன் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளில் 60% இலக்கை எட்டவில்லை என்பதே என அமெரிக்க அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மட்டுமின்றி, பெரும்பாலான அடிப்படை நோக்கங்களைக் கருத்தில் கொள்ளக்கூடியதை ரஷ்யா அடையத்தவறிவிட்டது எனவும் அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தாலையே, உக்ரைன் போர் ஒரு மாதம் கடந்தும் நீடிப்பதாக பெயர் மற்றும் அடையாளங்களை வெளிப்படுத்த விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அமெரிக்க அதிகாரிகளின் கருத்துகளுக்கு, ரஷ்ய தரப்பில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.
உக்ரைன் மீது கடந்த 30 நாட்களில் சுமார் 1100 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியுள்ளது. ஆனால் இவைகளில் இலக்கை எட்டிய ஏவுகணைகள் தொடர்பில் ரஷ்யாவிடம் எந்த தரவுகளும் இல்லை எனவும், இது ரஷ்யாவின் தற்போதைய சூழலை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
60% ஏவுகணைகள் இலக்கை எட்டவில்லை என்பது, இராணுவத்தின் தோல்வியாகவே கருத வேண்டும் என அமெரிக்க அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, 20% தோல்வி என்பதே, அந்த இராணுவத்தின் பலவீனத்தை அம்பலப்படுத்துவதற்கு சமம் என அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் இதுவரை மொத்த மக்கள் தொகையில் கால்பகுதி மக்கள் தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
ரஷ்ய குண்டுவீச்சால் குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், முக்கிய நகரங்கள் என மொத்தமும் பெரும் சேதத்தை எதிர்கொண்டுள்ளது. இருப்பினும், உக்ரைன் மீதான சிறப்பு நடவடிக்கை இது, படையெடுப்பல்ல என்றே ரஷ்யா கூறி வருகின்றது.