தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மையை இலகுவாக இழக்க நேரிடும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
“அரசாங்கம் நாடாளுமன்றத்தில் எடுத்த அதிகபட்ச ஆசனங்களின் எண்ணிக்கை 156 ஆகும். அதில் இப்போது 3 அமைச்சர்கள் இல்லை. ஆகையினால் அரசாங்கத்திற்கு தற்போது 153 ஆசனம் இருக்கின்றது.
அரசாங்கத்துடன், கூட்டு சேர்ந்துள்ள 11 கட்சிகளில் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அந்த எண்ணிக்கையும் குறையும் போது அரசாங்கத்திற்கு 123 ஆசனங்களே எஞ்சும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்க 112 ஆக இருக்க வேண்டும்.
123க்கும் 112க்கும் இடைப்பட்ட இடைவெளி 11. ஏற்கனவே 11க்கும் மேற்பட்ட மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எங்களின் பலத்தை சரியான நேரத்தில் காட்டுகிறோம்.
ஆண்டு இறுதியில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும். அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.