நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் கடற்தொழில் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கருவாடு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடற்தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான மண்ணெண்ணெய் உரிய விதத்தில் தேவையான அளவு கிடைக்காமையினால் மன்னார் மாவட்டத்தில் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கடற்தொழிலாளர்கள் கடற்தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதே நேரம் நீண்ட வரிசையில் நின்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மண்ணெண்ணெய் கொள்வனவு செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
கடற்தொழில் இன்மையால் மீன்களின் விலை அதிகரித்துள்ளமையினால் கருவாடு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கருவாடுகளின் விலைகளும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் தற்போது கருவாடுகளைக் கூட கொள்வனவு செய்ய முடியாத நிலை நிலவி வருகின்றது.
கடந்த மாதம் 900 ரூபா விற்பனை செய்யப்பட்ட நெத்தலி கருவாடு தற்போது 1150 ரூபாயாகவும், கடந்த மாதம் 1100 ரூபா விற்பனை செய்யப்பட்ட கட்டா கருவாடு 1350 ரூபாயாகவும் விலை அதிகரித்துக் காணப்படுவதோடு, ஏனைய வகை கருவாடுகள் அதிகரித்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.