நாட்டு மக்களின் பணத்தை ஒரு குடும்பம் சாப்பிடுகிறது எனவும் நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவுக்கு சமய தலைவர்களும், மோசமான ஊடகங்களுமே காரணம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு அருகில் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த பெரும் எண்ணிக்கையிலான பொலிஸாரின் முன்னிலையில் தைரியமாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களின் பணத்தை ஒரு குடும்பம் அனுபவிக்கும் போது நீங்கள்(பொலிஸார்) வேடிக்கை பார்க்கின்றீர்கள். நடக்க வேண்டியது இதுவல்ல. நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவுக்கு சமய தலைவர்களும், மோசடியான ஊடகங்களுமே பொறுப்புக் கூற வேண்டும். இதனை எவரும் இல்லை என்று கூற மாட்டார்கள்.
நாங்கள் பேச அஞ்ச தேவையில்லை. எமக்கு கட்சியும் இல்லை, நிறங்களும் இல்லை, இன பேதங்களும் இல்லை. நாங்கள் இலங்கை மக்கள். சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைவரும் இந்த இடத்தில் இருக்கின்றனர்.
ஒரு நாட்டினராக இருக்கின்றனர். நீங்கள் இந்த நாட்டை பாதுகாப்போம் என்று உறுதி வழங்கியவர்கள் எங்கே அந்த உறுதி. அதனை செய்யுமாறு கூறுகிறேன். அதனை தவிர செய்ய வேண்டியது எதுவுமில்லை.
நீங்கள் எங்களுக்கும் பாதுகாப்பு வழங்குகிறீர்கள். கருணா அம்மானுக்கும் பாதுகாப்பு வழங்குகிறீர்கள். நாங்களும் கருணா அம்மானும் ஒரு மட்டத்தில் வைக்கப்பட்டுள்ளோம்.
ஆனால், கருணாவை பெட்டன் பொல்லுகளால் தாக்குவதில்லை, பாதுகாப்பு வழங்குகிறீர்கள். எங்களை பெட்டன் பொல்லுகளால் தாக்குகிறீர்கள். அந்த தவறை செய்ய வேண்டாம்.
நீங்களும் பொறுப்பை எடுத்துக்கொள்ளுங்கள். அனைவரும் தனித்தனியாக பொறுப்புகளை ஏற்கவேண்டும். பொறுப்பை ஏற்காத காரணத்தினாலேயே 225 பேரும் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அழிவுக்கு பொறுப்பு கூறாமல் இருக்கின்றனர்.
முழு நாட்டு மக்களின் வாக்குகளாலேயே அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அனைவருக்கும் பிரச்சினை. சேர் நீங்களும் எங்கள் பணத்திலேயே சம்பளம் பெறுகின்றீர்கள். பொலிஸாருடன் எமக்கு எந்த கோபமும் இல்லை. நாங்கள் பிள்ளைகளை பராமரிக்க முடியாத காரணத்தினால், மன வருத்தத்தில் வந்துள்ளவர்கள.
அங்கு (ஜனாதிபதியின் இல்லம்) எவரும் இல்லை என்பது எமக்கு தெரியும். எனினும் நாட்டு மக்கள் எழுச்சி பெற்றால் என்ன நடக்கும் என்பதை அவர்களுக்கு காட்ட வேண்டும். நான் வீட்டில் இருந்தேன் இதனை பார்த்து வெளியில் வந்தேன். ஒருவன் ஆரம்பித்தால், அதனுடன் இணைந்து செல்ல வேண்டும்.
அதற்கு (பொலிஸார்) ஆதரவை தாருங்கள். நீங்கள்(பொலிஸார்) புரிந்துக்கொள்ளுங்கள்.தயவு செய்து கண்ணீர் புகை தாக்குதலை நடத்த வேண்டாம். பொலிஸார் அங்கும் இருக்கின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அவர்கள் மீது கல்வீசுகின்றனர். அவர்கள் கடமைக்கு வந்திருப்பது அவர்களுக்கு தெரியாது, அவர்களுக்கு ஏதாவது நடந்தால், அவர்களின் பிள்ளைகளை யார் பார்ப்பது என அந்த இளைஞன் கூறியுள்ளார்.