நான் தான் நன்றாக செய்தேன் என்று கூறிய ஜனாதிபதிக்கு நேற்று மக்கள் பதில் வழங்கியுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதனை புரிந்துக் கொண்டு எதிர்கால நடவடிக்கைகளை ஜனாதிபதி திட்டமிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது இதுவே முதல் முறையாகும்.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் காரணமாக மக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையே அது எடுத்துக் காட்டுகின்றது.
ஜனாதிபதிக்கு எதிராக அவரின் பதவியிலிருந்து வெளியேறுமாறு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் அனேகமானவர்கள் இளைஞர்களே.
இதே இளைஞர்கள் தான் அன்று கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வர வேண்டும் என்று முன்னின்று வாக்களித்தார்கள்.
ஆனால் இன்று அதே இளைஞர்கள் ஜனாதிபதியை பதவி விலகி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கோஷம் இடுகின்றார்கள். அந்தளவிற்கு இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டமானது எந்தவிதமான அரசியல் கட்சிகளின் தலையிலோ அல்லது பொது அமைப்புகளின் தலையிலோ இல்லாமல் மக்களாகவே முன்னெடுத்திருக்கின்றார்கள்.
இது போன்ற இன்னும் பல போராட்டங்கள் இடம்பெறும். எனவே இதை புரிந்துக் கொண்டு ஜனாதிபதி உரிய தீர்வினை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.