சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டு போராட்டம் நடத்தும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலிஸார் வீதி தடுப்புகளை அமைப்பதை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஷெனால் ஜெயசேகர என்பரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர், கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் போராட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பொலிஸாரால் அமைக்கப்பட்ட வீதித் தடைகள், நிரந்தரத் தடுப்புகள் மற்றும் அலரிமாளிகை அருகே நடைபாதையைத் தடுத்துள்ளமை என்பவற்றை மனுதாரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது மக்களையும் பாதிக்கும் இந்த கட்டுப்பாடுகள், ஒன்று கூடும் சுதந்திரம் மற்றும் சித்திரவதையில் இருந்து பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என அவர் தமது மனுவில்; கூறியுள்ளார்.
போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து வீதித் தடைகளையும் அகற்ற நீதிமன்ற உத்தரவை மனுதாரர் கோரியுள்ளார்.
மேலும், வீதித் தடுப்புகளை அமைப்பதற்கு முன் உயர் நீதிமன்றத்திடம் அனுமதி பெறுமாறு பொலிஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், வீதித் தடுப்புகளை அமைப்பது தொடர்பாக வழிகாடல்களை தயாரிக்க பொலிஸ் அதிபருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.