1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து, இலங்கையில் ஆட்சிக்கு வந்த இனவாத அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் வன்முறை சுழற்சிகள் மற்றும் இனப்படுகொலை என்பதை சர்வதேச சமூகத்திற்கு காண்பிக்கும் வகையில், ஒரு பிரித்தானியாவில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு ஆதாரங்களில் இருந்தும் புகைப்படங்கள் மற்றும் காணொளி பதிவுகளைப் பயன்படுத்தியும் உருவாக்கப்பட்ட ஆவணப்படம் 27 ஏப்ரல் 2022 அன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்டுள்ளது.
கோவிட் (Covid) மற்றும் நாடாளுமன்ற விதிமுறைகள் காரணமாக பார்வையாளர்கள் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதுடன், அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch – HRW) மற்றும் தமிழ் சமூகத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இறுதியாக, கேள்வி-பதில் நிகழ்ச்சியுடன் நிகழ்வு நிறைவுற்றதுடன், நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியுடனும் இக்காணொளிகளை பார்வையிட்டுள்ளனர்.
இந்த ஆவணப்படத்தின் முக்கிய நோக்கம், இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பாளர்களுக்கும் அது தொடர்பிலான முடிவினை எடுப்பவர்களுக்கும், தமிழ் மக்களின் அவல நிலைமையினை தெரியப்படுத்துவதாக இருந்தது.
இலங்கை மீது பொருளாதார தடைகளையும், போர் குற்றவாளிகளை தமது நாட்டுக்குள் அனுமதிப்பதற்கான தடைகளையும் அமுல்படுத்த முடியும். மனித உரிமைப் பாதுகாவலர்களும், அமைப்புகளும், தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் உண்மை நிலைமையினை உறுதிப்படுத்துவதற்கு இவ் ஆவணப்படம் சிறந்த ஆதாரமாக அமையும் என்றும் கூறப்படுகின்றது.
பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இலங்கை அரசின், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை ஆதாரங்களை வெளிப்படுத்தும் புகைப்பட கண்காட்சி ஒன்று 2008ம் ஆண்டு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் முதன் முதலாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக,2012 ம் ஆண்டு மீண்டும் ஒரு புகைப்பட கண்காட்சி மேலதிக தகவல்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்கள் திரட்டப்பட்டு நாடாளுமன்றத்துக்குள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அங்கு விவாதிக்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு:
• தமிழர் தாயகத்தில் இராணுவம் அகற்றப்படல் மற்றும் நாடளாவிய ரீதியில் படைக்குறைப்பு செய்தல்.
• ஆட்சி மாற்றத்திற்குப் பதிலாக, முழுமையான கட்டமைப்பு மாற்றம் (மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி அரசு நிறுவனங்களின் மறுசீரமைப்பு) முக்கியமானது.
• இழப்பீடு: தீவின் வடகிழக்கை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தல், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கினை இலங்கையின் ஏனைய பகுதிகளில் காணப்படும் சமூக அபிவிருத்தி குறிகாட்டிகள் மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், மீள் கட்டமைத்தல் மற்றும் புனரமைப்புச் செயற்பாடுகளை அமுல்படுத்துவதற்கான விசேட இடைக்கால அதிகாரசபையை நிறுவுதல்.
• வன்முறைச் சுழற்சிகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான அரசியல் தீர்வொன்று சுயநிர்ணய உரிமை மற்றும் அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளின் அடிப்படையில் உருவாக்குவதற்காக சர்வதேச நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும்.
• இலங்கை மீது அனைத்து அழுத்தங்களையும் பிரயோகித்து தேவைப்பட்ட அளவிலான தடைகளை படிப்படியாகப் பயன்படுத்தி காலக்கெடு உடன் கூடிய திட்டத்தின் அடிப்படையில் நீண்ட காலத்தீர்வினை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும். அதே வேளையில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் அவர்களுக்கான உணவு, மருத்துவம் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைப் பாதிக்காது கரிசனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
• இலங்கையில் போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான உலகளாவிய மனித உரிமைகள் தடைகள் ஆட்சிச் சட்டம் பிரயோகிக்கப்பட வேண்டும்.
• இலங்கையுடனான நெறிமுறையற்ற வர்த்தகத்தை நிறுத்த வேண்டும்.
• மனித உரிமைகளை கடைபிடிக்க இலங்கையை நிர்ப்பந்திக்க, வர்த்தக மற்றும் இராஜதந்திர தடைகளை விதித்தல்.
• கடந்த கால குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உத்தரவாதம் அளிக்கும் ஒரு நடவடிக்கையாக இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலை நிறுத்துவதற்கு சர்வதேச குற்றவியல் பொறிமுறையை நிறுவுதல். 20 நிமிட ஆவணப்படம் விரைவில் யூடியூப் (Youtube) பதிப்பாக பொதுமக்களுக்கு வெளியிடப்படும்.
நிகழ்ச்சிக்கான இணைப்புகளை கீழே காணவும் – https://www.britishtamilsforum.org/portfolio_item/screening-documentary-film-in-the-parliament-continuing-cycles-of-violence-and-genocide-in-sri-lanka