ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான அனுராதபுரத்தைச் சேர்ந்த ஞானக்கா மீண்டும் தனது பணிகளை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
அந்த வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான ஞானக்காவிற்கு எதிராகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது ஞானக்காவின் வீடு மற்றும் கோவில் என்பன மக்களால் முற்றுகையிடப்பட்டது.
அந்த நாட்களில், அவரது கோவில் மற்றும் வீட்டிற்கு இரவும் பகலும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், ஞானககா கடந்த சில நாட்களாக அனுராதபுரத்திற்கு அருகில் உள்ள இராணுவ முகாமில் உள்ள சொகுசு உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அவர் கடந்த 3ம் திகதி முதல் தனது ஆலயத்திற்குத் திரும்பியுள்ளதாக பிரதேசவாசிகள் கூறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இந்த நாட்களில் பல உயர்மட்ட அரசியல்வாதிகளும் அவரது சேவையைப் பெற வந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர் என அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.