பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவி இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்குச் இன்று சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்ச பின்னர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியிருந்தது.
இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த பிரதமரது இணைப்பு செயலாளர் கீதநாத் காசிலிங்கம் இதுவரைக்கும் அவ்வாறான கடிதம் எதுவும் பிரதமரால் ஜனாதிபதிக்கு அனுப்பப்படவில்லையென தெரிவித்தார்.
இருப்பினும்,நாளைய தினம் அலரிமாளிகையில் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதமர் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்தப் பிரதமர் பதவி எனக்குப் பெரிய விடயமல்ல.மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தாலும் பிரதமராக இருந்தாலும் அல்லது வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், மகிந்த ராஜபக்சவே என நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச உரையாற்றிய பழைய காணொளி ஒன்றை நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.