காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவமானது அரசாங்கத்தால் ஏவி விடப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளதாக மூத்த ஊடகவியலாளர் அ. நிக்சன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில், ”இலங்கையின் சூழ்நிலைகள் பதற்றமான ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் இப்போராட்டம் மக்களின் தன்னெழுர்ச்சியான போராட்டமாக இடம்பெற்றிருந்த நிலையில், எங்கு இதில் ஒரு குழப்பம் ஏற்பட்டது? என வினவிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குழப்பம் ஏற்பட்டமை என்பது திட்டமிட்ட ஒரு செயல்தான். அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதே இரத்த களரி ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகச் சந்தேகம் எமக்கு எழுந்தது. அதனை நாங்கள் வெளியிட்டிருந்தோம். அவ்வாறே இன்று இரத்த களரி ஏற்பட்டுள்ளது.
பலர் காயமடைந்திருக்கிறார்கள். சிலர் உயிரிழந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த மோதல் எங்கே ஆரம்பித்தது என்றால் காலிமுகத்திடலிலே தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருந்த போராட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்காகக் குண்டர் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுதான் முன்வைக்கப்படுகிறது.
போராட்டக்குழுவினருக்கும் குண்டர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது அந்த குண்டர் குழுவுக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக போராட்ட களத்தில் நின்ற இளைஞர்கள் சொல்லுகிறார்கள்.
இதனைக் கொழும்பு சட்டத்தரணிகள் சங்கமும் கூறியுள்ளது. அத்துடன் மனித உரிமை ஆர்வலர்கள் அங்கு சென்றிருக்கிறார்கள். நிலைமையை நேரில் பார்க்கிறார்கள். அங்கே கூடாரங்கள் எரிக்கப்பட்டுள்ளன.
அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அந்த காட்சிகளைப் பார்க்கிறபோது மிக மோசமான முறையிலே தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் திட்டமிட்டு இந்த வன்முறையை ஏவியிருக்கிறது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.