முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் சீ.பீ.ரத்நாயக்க உள்ளிட்டவர்களிடம் இன்றைய தினம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
கடந்த 9ம் திகதி காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான இந்திக்க அனுருத்த மற்றும் சஞ்சிவ எதிரிமான்ன ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து மேற்குறிப்பிட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் வாக்கு மூலங்களை பதிவு செய்து கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்காக புலனாய்வுப் பிரவின் ஐந்து குழுக்கள் நேற்றைய தினம் நாடாளுமன்றம் சென்றிருந்த போதிலும், வாக்கு மூலங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என தெரியவருகிறது.
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கான போதியளவு சாட்சியங்கள் இருந்தால் அடையாளம் காணப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 22 பேரை கைது செய்ய முடியும் என சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிசாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன், அவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.