குறைந்த வருமானமுடைய கொழும்பு தொடர்மாடி வீடுகளில் வசிக்கும் மக்களுக்குச் சமைத்த உணவு வழங்குங்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமருக்கு நேரடியாகக் கடிதம் அனுப்பியுள்ள மனோ கணேன், ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
உணவு இல்லை. எரிவாயு இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றால் நாட்டிலேயே மிகவும் துன்புறுவது கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள்தான்.
மாநகரத்தில் நாளாந்த வருமானம் பெற்று வந்த குடும்பங்கள், ஒருவேளை உணவுமின்றியும், உணவு சமைக்க வழியுமின்றியும் தவிக்கிறார்கள்.
குறிப்பாக, வடகொழும்பின் பின்தங்கிய நகர தோட்ட குடியிருப்புகளில் வாழ்ந்த மக்கள், எமது ஆட்சிக்காலத்தில் சுமார் 13,000 தொடர்மாடி இல்லங்களில் குடியமர்த்தப்பட்டார்கள்.
இந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கும், கொழுப்பு நகரின் பின்தங்கிய குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கும், பங்கீட்டு அட்டைகள் வழங்கி, அவர்களுக்குச் சமைத்த உணவு வழங்குங்கள்.
இதற்காக, கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பாரிய சமையலறை மற்றும் கொழும்பு மாநகரசபைக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத சமையலறைகள் ஆகியவை பயன்படுத்தலாம். இராணுவ சமையல் பணியாளர்களை பணியில் அமர்த்தி இயல்பு நிலைமை திரும்பும் வரை இந்த திட்டத்தை முன்னெடுங்கள்.
நாடு முழுக்க வாழ்வாதார பிரச்சினைகள், மக்களின் கழுத்துகளை நெரிக்கின்றன. இவற்றில் மிகவும் துன்பங்களை நகரங்களில் வாழும் குடும்பங்கள் சந்திக்கிறார்கள். கிராமிய பகுதிகளில் இருக்கும் இயற்கை வளங்கள், மரம், செடி, கொடி, தண்ணீர் என்பன நகரங்களில் இல்லை. ஒரு கிண்ணம் நீரும் பணம் கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது.
அதிலும் கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள் படும்பாடு சொல்லும்தரமன்று. இந்த கொழும்பு மாநகர பின்தங்கிய மக்களை, விசேட தேவை உள்ள பிரிவினராக அறிவித்து, பங்கீட்டுக் குடும்ப அட்டைகளை வழங்கி அவர்களுக்கு முதற்கட்டமாகச் சமைத்த உணவு வழங்குங்கள்.
இதன்மூலம் இங்கு வாழும் பள்ளி பிள்ளைகள், குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களின் பசியை ஓரளவாவது போக்கலாம். மீண்டும் நாட்டில் இயல்பு நிலைமை திரும்பும்வரை இந்த திட்டத்தை நடைமுறை செய்யுங்கள்.
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், எதிரணியில் இருந்தபடி கட்சி பேதமின்றி, இது தொடர்பில் நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்” என குறிப்பிட்டுள்ளார்.