இலங்கையுடனான தொழில்நுட்ப மட்ட பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது
இலங்கைக்கு கடன்களை பெற்றுக்கொள்வதற்காக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரண்டு நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களி்ன் குழு இறுதிச்செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தெரிவு செய்யப்பட்ட தரப்பினர் தொடர்பான அறிக்கை, இறுதி ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் தகவல்படி, தெரிவுசெய்யப்பட்ட குழுக்களின் அறிக்கை இன்றைய ஆரம்ப அமைச்சரவைக் கூட்டத்திற்கு அனுப்பப்படவுள்ளது.
அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவி விலகல் விடயம் காரணமாகவே இந்த இரண்டு சிறப்பு அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கையின் இறுதி கட்டம் தாமதமானது.
அரசாங்கம் ஏப்ரல் 12 அன்று வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்த முடிவு செய்த நிலையில், இரண்டு வாரங்களில் இரண்டு துறைகளில் நிபுணர்களை விரைவாக நியமிக்க அதிகாரிகள் ஆயத்தமாக இருந்தனர்.
எனினும், செயல்முறை எதிர்பார்த்ததை விட அதிக காலம் எடுத்தது.
இந்த சூழ்நிலையில், சர்வதேச நாணய நிதியம் இலங்கை அதிகாரிகளுடனான அவர்களின் தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல்களை விரைவில் முடித்த பின்னர் ஒரு அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.