உயிரிழந்த அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் குடும்பத்தினருக்கும், அவரின் அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அல்லது துஷ்பிரயோகம் எந்த வகையிலும் அனுமதிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன சிறுமி
நேற்று முன்தினம், வீட்டில் இருந்து கோழியிறைச்சி வாங்குவதற்காக வியாபாரத்தளத்துக்கு சென்ற இந்த 9 வயது சிறுமி காணாமல் போனதாக முறையிடப்பட்டது.
இதனையடுத்து நேற்று மாலை அவரது சடலம் வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது.
விசாரணை
பண்டாரகம, அட்டுலுகமையில் மரணமான சிறுமி தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், சிறுமியின் சடலம் தொடர்பில் பிரேத பாிசோதனை இன்று இடம்பெறுகிறது.
எனினும் புதிய தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்று பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சிறுமியின் தந்தையும் கோழியிறைச்சி விற்பனையக உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொடர்ந்தும் உண்மையை கண்டறியும் விசாரணைகள் இடம்பெறுவதாக பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.