பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி பாத்திமா ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் நாளை (ஜூன் 1ம் திகதி) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் நேற்று (30) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ‘கொத்து பாஸ்’ என்ற சந்தேக நபர் இன்று (31) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாணந்துறை நீதவான் ஜெயருவன் திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சந்தேகநபர் அட்டலுகம பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான பாரூக் மொஹமட் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது கொலை, கடத்தல், தடை செய்தல், பாலியல் வன்கொடுமைக்கு முயற்சி செய்தல், காயம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றவியல் தாக்குதல் ஆகிய ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது கடத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த சிறுமி வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடிக்கடி வீட்டிற்கு வந்துச் சென்ற சந்தேகநபர்
இதேவேளை, ஆயிஷா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. சிறுமியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 29 வயதான குடும்பஸ்தர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமியின் தந்தையும் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவரும் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதாக தெரியவந்துள்ளது.
சிறுமி காணாமல் போனதையடுத்து கிராமம் முழுவதும் சிறுமியைத் தேடியபோது, குறித்த நபரும் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.