இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக மிருகக்காட்சிச்சாலை மிருகங்களையும் பட்டினி போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பட்டினியில் வாடும் மிருகங்கள்
தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை உள்ளிட்ட மிருகக்காட்சிச்சாலைகளில் உள்ள மிருகங்களுக்கு நாளாந்த உணவை வழங்குமளவுக்குக் கூட போதுமான நிதி கையிருப்பில் இல்லை என்று மிருகக்காட்சிச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிருகக்காட்சிச்சாலை அதிகாரிகள் மற்றும் கமத்தொழில், வனஜீவி, வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமத்தொழில், வனஜீவி, வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள மிருகக்காட்சிச் சாலை அதிகாரிகள்,
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை வீழ்ச்சி
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு, எரிபொருள் பிரச்சினை காரணமாக உள்நாட்டுச் சுற்றுப் பயணிகளின் வருகை வீழ்ச்சி மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தினால் வரவு-செலவுத் திட்டம் மூலம் மிருகக்காட்சிச் சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்பட்டு விட்டது மிருகக்காட்சிச் சாலைகளுக்கு உணவுப் பொருட்களை வழங்கிய ஒப்பந்ததாரர்களுக்குத் தற்போதைக்கு 59 மில்லியன் ரூபா கொடுப்பனவு நிலுவை உள்ளது.
எதிர்வரும் மாதங்களுக்கு மிருகங்களுக்கான உணவுகளை வழங்க குநை்த பட்சம் 120 மில்லியன் ரூபா வரை தேவைப்படும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து விடயம் தொடர்பில் திறைசேரியுடன் கலந்தாலோசனை செய்து நிதி ஒதுக்கீடு ஒன்றைப் பெற்றுத் தர முயற்சிப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு உறுதியளித்துள்ளார்.