சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, எந்தவொரு நிறுவனத்தினதும் கடன்கள் செலுத்தப்படாத கடன்களாக கழிக்கப்படவில்லை என மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த கடன்கள், முன்பணம் அல்லது வட்டி செலுத்தாமல், செயல்படாத கடன்கள் (NPLs) என்றும், அவற்றை தரப்பினரிடமிருந்து வசூலிக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்தொடர்தல், பேச்சுவார்த்தை, ஏலம் மற்றும் வழக்குகள் மூலம் மீட்பு செயல்முறையை பின்பற்றுவதாகவும் மக்கள் வங்கி சுட்டிக்காட்டுகிறது.
54 பில்லியன் ரூபா கடன் தொகை
மக்கள் வங்கியினால் 2021 இல் தனியார் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 54 பில்லியன் ரூபா கடன் தொகை தற்போது செயற்படாமல் இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து இது தொடர்பான முழுமையான அறிக்கையை ஒரு மாதத்துக்குள் சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத், மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.
இந்த அறிக்கையில், குறித்த கடன்களுக்கு அனுமதிகளை வழங்கியவர்கள் யார்? எவ்வாறு இந்த கடன்கள் மதிப்பிடப்பட்டன? போன்ற விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும் என்றும் கோப் தலைவர் கேட்டுள்ளார்.
இந்தநிலையில் எதிர்காலத்தில் கடன்கள் வழங்கப்படும் போது, அவற்றை பொறுப்புணர்வுடன் முன்னெடுக்கவேண்டும் என்று கோப் குழுவின் தலைவர், மக்கள் வங்கியின் தலைவரிடம் கேட்டுள்ளார்.
சாணக்கியன் எம்.பி வெளியிட்ட தகவல்
முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன், இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டிருந்தார்.
இதில் எந்த நிறுவனங்கள் மக்கள் வங்கியிடம் இருந்து கடன்களை பெற்று திரும்பச்செலுத்தாமல் உள்ளன என்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.