எதிர்காலத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு எவ்வித பிரச்சினையும் இன்றி எரிபொருளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (3) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் முச்சக்கர வண்டிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கு முகங்கொடுத்து முச்சக்கர வண்டித் தொழிலைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உலக வங்கியிடமும், இந்தியாவிடமும் உர மானியங்கள்
இதேவேளை, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க குறைந்தபட்சம் 3 தொடக்கம் 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், அதனை பெற்றுக்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியாக வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனினும் தொழிநுட்ப பேச்சுவார்த்தைகள் முடியும் வரையில் இது குறித்து உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இந்நிலையில் உணவுப்பஞ்சம் ஒன்றினை நாடு எதிர்கொண்டு வருகின்ற நிலையில் விவசாயத்தை உடனடியாக மீட்டெடுக்க தேவையான உர மானியங்களை உலக வங்கியிடமும், இந்தியாவிடமும் கோரியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
குறிப்பாக பெரும்போகதிற்கு தேவையான யூரியா உரத்தினை வழங்க உலக வங்கி இணங்கியுள்ளதாகவும், சிறுபோகத்திற்கு தேவையான உரம் இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.