பல்வேறு வியாதிகளை வீட்டிலேயே குணப்படுத்த நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான உணவுப்பொருள் தான் கருஞ்சீரகம். இதை நாம் நறுமணப் பொருளாகவோ, தாளிக்கும் பொருளாகவோ உணவுகளில் சேர்ப்போம்.
கருஞ்சீரகத்தில் அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், விட்டமின்கள், கரோட்டின், கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து போன்ற பல்வேறு விதமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
கருஞ்சீரகம் எண்ணிலடங்கா பல வியாதிகளைக் குணப்படுத்த உதவுகின்றது. இதை நாம் தினமும் உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலமே மருத்துவரை நாட வேண்டிய அவசியம் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
அந்தவகையில் கருஞ்சீரகத்தை எடுத்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
கருஞ்சீரகத்தின் பயன்கள்
கருஞ்சீரகத்தை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், அது நம் நினைவுத்திறனை அதிகரிக்க உதவுகிறது. வெறும் வயிற்றில் இதனை தினசரி உண்டுவந்தால், மூளையின் செயல்பாடு சிறந்த விதத்தில் இருக்கும்.
கருஞ்சீரகத்தை, புதினா இலைகள் சேர்த்து பயன்படுத்தி வந்தால், அது அல்சைமர் போன்ற நரம்பு மண்டல பாதிப்புகளுக்கான சிறந்த தீர்வாக அமையும் .
நீரிழிவு நோயாளிகள் நல்ல பலனைப்பெற, பிளாக் டீ உடன் கருஞ்சீரகத்தை சேர்த்து உண்பதால் நல்ல பலனை பெறலாம்.
கருஞ்சீரக விதைகள், இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. இரத்தத்தில், கெட்ட கொழுப்புகளின் அளவை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
பல்வலிக்கு சிறந்த தீர்வு
கருஞ்சீரக எண்ணெயை, கை, கால் மூட்டுகளில் தடவுவதன் மூலம், நல்ல பலனை பெறலாம். உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க, கருஞ்சீரக எண்ணெயை பயன்படுத்துமாறு, ஆயுர்வேத மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.
கருஞ்சீரக எண்ணெய், நமது உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு மட்டுமல்லாது, ரத்த அழுத்த மாறுபாடு ஏற்படாவண்ணம் பாதுகாக்கிறது. உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், வெதுவெதுப்பான நீரில், கருஞ்சீரக எண்ணெயை கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பல் வலிக்கு உடனடி தீர்வாக கருஞ்சீரகம் விளங்குகிறது. வாய் சம்பந்தமான பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு, அரை தேக்கரண்டி கருஞ்சீரக எண்ணெயை, ஒரு கப் தயிரில் கலந்து அதை தினமும் இரண்டு முறை, ஈறுகளில் தேய்த்து வர பற்கள் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, கருஞ்சீரக மருத்துவம், இனிய வரப்பிரசாதமாக உள்ளது. வெதுவெதுப்பான நீரில், கருஞசீரக எண்ணெய் மற்றும் தேன் கலந்து குடித்துவர நல்ல பலன்கள் கிடைக்கும்.
வெதுவெதுப்பான நீரில், கருஞ்சீரகத்தை கலந்து தினமும் குடித்து வர , உடல் எடை குறைப்பில் நல்ல மாற்றத்தை காணலாம்.
நல்ல பளபளப்பான சருமத்திற்கு, கருஞ்சீரக எண்ணெயை, எலுமிச்சை சாற்றில் கலந்து முகத்தில் தடவி வர வேண்டும். கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள், முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதோடு மட்டுமல்லாது, முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது.




















