பிரான்ஸில் தமிழ் பெண்ணை கொடூரமாக தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. லியோன் மாவட்டத்தின் 5வது வட்டாரத்தில் உள்ள quai Pierre Scize பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தமிழ் பெண் செஞ்சிலுவைச் சங்கத்திடம் இருந்து உணவு பெறத் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
திருமணமான பெண்களுக்கான தமிழ் கலாச்சாரத்துடன் இணைக்கப்பட்ட பாரம்பரிய பழக்கவழக்கங்களை மதிக்கவில்லை என்று கண்டித்து தனது மனைவியான தமிழ் பெண்ணை கணவர் கொடூரமாக தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கம்பியால் பலமுறை தாக்கப்பட்ட பெண்
குறித்த பெண் விழுந்து, சுயநினைவை இழக்கும் வரை, கம்பியால் பலமுறை தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் சுயநினைவுக்கு வந்த பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அங்கிருந்து தப்பி சென்றவர் ஒரு மருத்துவ உளவியல் மையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
அங்கு ஊழியர்கள் அந்த பெண்ணுக்கு கவனித்து வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பெண்ணின் முறைப்பாட்டிற்கு அமைய அன்றைய தினமே கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் விசாரணையின் போது தான் மனைவி கீழே தள்ளி மாத்திரமே விட்டதாகவும் தாக்கவில்லை எனவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவரின் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், சந்தேகநபர் எதிர்வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.