இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக வேலையை இழந்துள்ள கட்டுமானத்துறையின் தொழிலாளர்களுக்காக தேசிய மக்கள் சக்தி-பொறியியல் மன்றம் முக்கிய திட்டங்களை முன்வைத்துள்ளது.
தற்போது இலங்கையின் கட்டுமானத்துறையில் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் பல திட்டங்களை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி-பொறியியல் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வங்கிக் கடன்களுக்கான நிவாரணம்
தற்போதைய நெருக்கடியால் வேலையிழந்த நபர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான தொழிலாளர்களாக மாற்றுவதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும். மற்றுமொரு முன்மொழிவில் வங்கிக் கடன்களுக்கான நிவாரணம் மற்றும் கட்டுமான நிறுவனங்களால் பெறப்பட்ட குத்தகை வசதிகள் ஆகியவை அடங்கும்.
சீன அரசாங்கத்திடம் விடுக்கப்படும் கோரிக்கை
வேலையிழந்த நபர்களுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி மூலம் சலுகைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பரிசீலிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டில் பல சீன கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் சீனப் பிரஜைகள் எனவும் பொறியியல் மன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையை சீர்செய்வதற்கு அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் எனவும், அத்தகைய நிர்மாணத் திட்டங்களில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குமாறு சீன அரசாங்கத்திடமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமும் கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் மன்றம் தெரிவித்துள்ளது.