வடக்கு லண்டனில் பெண் ஒருவரும் ஐந்து வயது சிறுவனும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். உயிரிழந்தவர்கள் தாய் மகன் என நம்பப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் இன்று பிற்பகல் 1.37 மணியளவில் ப்ரூக்சைட் சவுத், பார்னெட்டில் உள்ள வீட்டிற்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். இதனையடுத்து துணை மருத்துவர்களும், ஏர் ஆம்புலன்ஸ் வாகனமும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.
எனினும், குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் 37 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மெட் சிறப்பு குற்றப்பிரிவு ஆணையம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
காவல்துறையிடம் தகவல் வழங்குமாறு கோரிக்கை
இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தலைமை கண்காணிப்பாளர் சாரா லீச் இது “நம்பமுடியாத சவாலான காட்சி” என்று விவரித்தார்.
மேலும் “என்ன நடந்தது என்பதை ஆராய சிறப்பு துப்பறியும் நபர்கள் பணியாற்றி வருகின்றனர் எனவும் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் வேறு எவரும் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்பதை உள்ளூர் பகுதியில் வசிப்பவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இன்று அல்லது சமீப நாட்களில் வழக்கத்திற்கு மாறான எதையும் பார்த்தவர்கள் அல்லது கேள்விப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் காவல்துறையிடம் தகவல் வழங்குமாறு அவர் கூறியுள்ளார். விசாரணைகளின் போது நீங்கள் தகவல் முக்கியமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்
ஆரம்பத்தில், ஒரு பெண்ணும் ஐந்து வயது சிறுமியும் தாக்குதலில் பலியானதாக மெட் பொலிஸார் கூறியிருந்தனர். எனினும், கொல்லப்பட்ட குழந்தை ஆண் குழந்தை என்று பின்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.