இலங்கைக்கு டொலர் வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் பிரதான தொழிலாக சுற்றுலா தொழிற்துறை இருந்து வருகிறது.
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, மின் துண்டிப்பு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் ஏனைய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது வெகுவாக குறைந்துள்ளது.
இதனால், சீகிரிய குன்று அமைந்துள்ள சுற்றுலாப் பகுதியில் தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மாட்டு வண்டி சவாரி
யானை சவாரி, ஜீப் வண்டி சவாரி, மாட்டு வண்டி மற்றும் ஏனைய போக்குவரத்து சாதனங்களில் சீகிரியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பல நாட்கள் சீகிரியாவில் தங்கிருப்பார்கள் என சுற்றுலாத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ள சீகிரிய பிரதேசத்தை சேர்ந்த பலர் கூறுகின்றனர்.
இந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் நாட்டில் டொலர்களை செலவு செய்துள்ளனர்.
தற்போது குறைந்தளவில் சுற்றுலாப் பயணிகள் வந்தாலும் நாட்டில் நிலவும் கஷ்டமான சூழ்நிலையில் அவர்கள் திரும்பி சென்று விடுகின்றனர்.
உணவகங்களில் நாற்காலிகள் அமர்ந்திருக்கும் நாய்
இதனால், தொழில் வாய்ப்புகள் குறைந்துள்ளதுடன் சுற்றுலா வர்த்தகங்களும் மூடப்பட்டுள்ளன.
சில வர்த்தக நிலையங்கள் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்த்து திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உணவு மற்றும் பானங்களை பெற்றுக்கொண்ட உணவகங்களில் உள்ள நாற்காலிகளில் நாய்கள் போன்ற விலங்குகள் அமர்ந்திருப்பதை சீகிரியாவில் காண முடிகிறது.
சீட்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள சுற்றுலா வழிக்காட்டிகள்
மேலும் சுற்றுலா வழிக்காட்டிகள், முச்சக்கர வண்டி சாரதி சீகிரிய குன்றுக்கு எதிரில் அமர்ந்து சீட்டாடத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தமைக்கு அரசாங்கம் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும் என சுற்றுலா வழிக்காட்டிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சுற்றுலாத் தொழிற்துறைக்கு முன்னுரிமை வழங்கிய செயற்பட்டிருந்த சுற்றுலாத் தொழிற்துறை இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்காது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எமது நாடுகளில் இப்படியான பிரச்சினைகள் இல்லை
அதேவேளை குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் சீகிரிய பிரதேசத்திற்கு வந்துள்ளதுடன் இலங்கை தம்மை கவர்ந்துள்ளதன் காரணமாக தாம் சுற்றுலா வந்ததாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம், எரிபொருள், எரிவாயு போன்றவற்றின் தட்டுப்பாடு காரணமாக இலங்கை மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தமது நாடுகளில் இப்படியான பிரச்சினைகள் இல்லை எனவும் தற்போதைய அரசாங்கம் இந்த விடயம் குறித்து கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.