இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 160 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இலங்கையின் துடுப்பாட்ட வீரர் சாமிக கருணாரத்ன 75 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள், எட்டு பவுண்டரி்கள் உள்ளடங்கலாக 75 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
தொடர் ஆட்ட நாயகன் விருது
இதனையடுத்து, 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 39.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவுஸ்திரேலிய சார்பில் அலெக்ஸ் கேரி 45 ஓட்டங்களையும், கெமரன் கிறீன் 25 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு வலு சேர்த்திருந்தனர்.
குறித்த போட்டித் தொடரின் ஆரம்ப மற்றும் கடைசிப் போட்டிகளை அவுஸ்திரேலிய வெற்றி கொள்ள, ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள்தொடரை இலங்கை அணி 3இற்கு 2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருது சாமிக கருணாரத்தினவுக்கு வழங்கப்பட்டது. தொடர் ஆட்ட நாயகன் விருது ஐந்து போட்டிகளில் இரண்டு அரைச் சதங்கள் உள்ளடங்கலான 249 ஓட்டங்களைப் பெற்றிருந்த குசல் மெண்டிசுக்கு வழங்கப்பட்டது.