இலங்கை நாட்டு மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான ஒரு சிறு பகுதியினர் இருக்கலாம். எனினும் இவர்கள் வந்து இலங்கையில் முதலீடு செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு- கிழக்கை எமக்கு தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் புலம்பெயர் தமிழர்கள் முன்னேற்ற செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி
எனது காலத்திலேயே யாழ்ப்பாணத்திற்கு முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்டது. எனது காலத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்பட்டது.
சுன்னாகத்தில் இருந்து வவுனியாவுக்கு ஒரு தொகுதியை அமைத்தோம். முல்லைத்தீவு மன்னார் போன்ற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கினோம்.
பிரபாகரன் உயிரிழந்த பின்னர் மூன்று மாதங்களில் புதுமாத்தளன் பகுதிக்கு மின்சாரம் வழங்கினோம். தற்போதுள்ள பிரச்சனை டொலர் இன்மையால் டீசலை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாகும்.
அதனால் டீசலில் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரம் போதுமானதாக இல்லை. எனவே நாம் தற்போது புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கு செல்ல வேண்டும்.
சூரிய ஒளியில் மின்சாரம்
இலங்கையில் மிக அதிகமாக புதுப்பிக்கத்தக்க மின்சார ஆற்றல் காங்கேசன்துறை பூநகரி மன்னார் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி திட்டத்தை நானே கொண்டு வந்தேன்.
அதனை இலங்கை முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.