சுகாதார துறையினருக்கான எரிபொருள் விநியோகத்தை குழப்ப முனைவோரையும் கிளிநொச்சி மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை தாக்கியவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்றைய தினம்(25) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு
அந்த அறிக்கையில், நாடு முழுவதும் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. மக்கள் அனைவருமே எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை நாங்கள் அவதானித்து வருகின்றோம்.
இந்த நேரத்தில் உயிர் காக்கும் மிக அதி உயர் அத்தியாவசிய சேவையான சுகாதார சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் தமது கடமைகளை தொடர்ந்து மேற்கொண்டபடி எரிபொருளையும் தமது குடும்பங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களையும் பெற்றுக்கொள்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்
குறிப்பாக அவர்கள் தமது கடமை நிலையங்களான வைத்தியசாலைகளுக்கும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கும் ஏனைய பணிமனைகளுக்கும் கடமைக்கு வருவதற்கான தமது தனிப்பட்ட வாகனுங்களுக்கான எரிபொருளைப் பெற முடியாது மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் படிப்படியாக சுகாதார சேவை முடங்கும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரத்தில் நிரல் சுகாதார அமைச்சு சுகாதார பணியாளர்களுக்காக விசேட ஏற்பாட்டின் மூலம் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு ஒழுங்குகளை செய்தது. அதற்காக மாவட்டம் தோறும் தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் எரிபொருள்களை விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சு ஒழுங்குகளை செய்திருந்தது.
சுகாதார பணியாளர்கள்
நேற்று முதல் தடவையாக இந்த ஒழுங்குக்கு அமைய சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வட மாகாணத்திலும் இதற்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்க ஒழுங்குகள் செய்யப்பட்டது. இந்த வசதியை நடைமுறைப்படுத்துவதற்கு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் சுகாதார துணைக்களத்தினராகிய நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளோம்.
இதேவேளை வாரத்தில் ஒரு நாள் மட்டும் சுகாதார பணியாளர்களுக்கு என தெரிவு செய்யப்பட்ட ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் இருந்து எரிபொருள் வழங்குவதற்காக செய்யப்பட்ட இந்த ஒழுங்கை பல இடங்களில் பொது நல நோக்கற்ற பொதுமக்களில் சிலர் தீவிரமாக எதிர்த்ததுடன் குழப்ப நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
மிகுந்த சிரமத்தின் மத்தியில் பொலிசாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடனேயே எரிபொருளை விநியோகிக்கக் கூடியதாக இருந்தமை மிகுந்த மன வருத்தத்துக்குரியது.
தாக்குதல்
இவை அனைத்துக்கும் மேலாக கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார பணியாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒருங்கிணைப்பதற்காக அம்மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ந.சரவணபவன் அவர்கள் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சில பொதுமக்கள் அங்கு வரிசையில் காத்திருந்த தாதிய உத்தியோகத்தர்கள் சிலரை நகரவிடாமல் தடைகளை ஏற்படுத்தினர்.
வைத்திய கலாநிதி சரவணபவன் அவர்களிடம் சென்று தாதிய உத்தியோகத்தர்களை முன்னோக்கி நகர அனுமதிக்குமாறு கேட்டபோது அதற்கு மறுத்து அவருடன் வாக்குவாதப்பட்டவர்களுள் ஒருவரால் அவர் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் வடமாகாணத்தின் சுகாதார பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நாகரிகமற்ற, மனிதாபிமானமற்ற, செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
தாக்குதலுக்குள்ளான வைத்திய கலாநிதி சரவணபவன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் தற்போது வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்ட நபரும் பொலிஸாரினால் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் மத்தியிலும் பணியாற்றி பல்லாயிரம் உயிர்களைக்காப்பாற்றிய மற்றும் கோவிட் பெருந்தொற்று நேரத்தில் அனைவரும் வீடுகளில் முடங்கியிருக்க தமது உயிரைப் பணயம் வைத்து சுகாதார சேவைகளை வழங்கி பெருமளவு உயிர்களையும் காப்பாற்றி இன்று கோவிட்டை கட்டுப்பாட்டினுள் கொண்டு வர உழைத்த வடமாகாண சுகாதார ஊழியர்களுக்கு நேற்றும் கடந்த சில நாள்களாகவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் மூலம் ஏற்பட்ட அனுபவங்கள் மிகுந்த மனச்சோர்வையும் கவலையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக தமது குடும்பங்களுக்கு பொருள்களையும் ஏனைய வசதிகளையும் ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்காது சேவையை தொடர்வதற்கு முன்னுரிமை வழங்கி தொடர்ச்சியாக பணியாற்றி வரும் சுகாதார ஊழியர்களுக்கு அவர்களது உயிர்காக்கும் சேவைக்காக பணியிடங்களுக்கு வருவதற்கான எரிபொருளைக்கூட முன்னுரிமை அடிப்படையில் பெறுவதற்கு தடைவிதிக்கும் மன நிலையில் பொதுமக்கள் இருப்பார்கள் என சுகாதாரத்துறையினர் இதுவரை எண்ணியிருக்கவில்லை.
போர்க்காலத்தில் இன்றிலும் விட மிகக் குறைவாக எரிபொருள் இருந்தகாலத்தில் கூட சுகாதாரத் துறையினருக்கான முன்னுரிமை எங்கும் மறுதலிக்கப்படவுமில்லை, எதிர்க்கப்படவுமில்லை என்பதையும் நாம் மறக்க முடியாது.
துரதிஷ்டவசமான இந்நிலைமை நீடிக்குமானால் வடமாகாண சுகாதார சேவைகள் முடங்கும் நிலை ஏற்படுவதை யாராலும் தவிர்க்க முடியாது போகும். அப்போது வைத்தியசாலை சேவைகளை முற்றாக வடமாகாண மக்கள் இழக்க வேண்டி ஏற்படலாம்.
அதனால் காப்பாற்றக்கூடிய பல அப்பாவிகளின் உயிர்கள் மட்டுமல்லாது இன்று குழப்பம் விளைவிப்பவர்களின் உயிர்கள் கூட பலியாக நேரிடலாம்.
களத்தில் பணியாற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய சகல சுகாதார பணியாளர்களும் கடமைகளுக்கு வருவதை தவிர்த்து எரிபொருள் வரிசைகளில் காத்திருக்கும் போது டெங்கு மரணங்கள், தாய்-சேய் மரணங்கள் என்பவை பன்மடங்கு அதிகரிப்பதை தவிர்க்க முடியாது போகும்.
சுகாதாரத்துறை மக்கள் அனைவரதும் உயிர்காக்கும் அத்தியாவசிய சேவை என்பதை புரிந்துகொண்டு எதிர்காலத்திலாவது சுகாதார பணியாளர்கள் தடையின்றியும் தாமதமின்றியும் வேலைக்கு வருவதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் முன்னுரிமைச் சேவைகளுக்கு இடையூறு செய்யாது பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும் இவற்றுக்கு எதிராக குழப்பங்களை ஏற்படுத்துகின்ற சமூக விரோத சக்திகளுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். என இந்த அறிக்கையில் தெிவிக்கப்பட்டுள்ளது.