இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடியை அடுத்து, சைக்கிளுக்கான மவுசு அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 210 ரூபாயாக காணப்பட்டது. தற்போது சுமார் 450 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதில் குறிப்பாக தற்போது உள்ள எரிபொருள் நெருக்கடியை பயன்படுத்தி, கறுப்புச் சந்தையில் யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் ஒரு லீற்றர் பெற்றோல் 3 ஆயிரம் ரூபா முதல் விற்பனை செய்யப்படுகிறது.
அதிலும் நாள் கணக்கில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தங்கியிருந்தால் கூட எரிபொருள் கிடைக்காத நிலை காணப்படுகிறது.
நாளாந்த உழைப்பையும் விட்டு விட்டு எரிபொருளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைபெறும் கைகலப்புக்கு பஞ்சமே இல்லை. இந்த நிலையில் பழைய கறள் கட்டிய சைக்கிள் முதல், ஒரு லட்சம் ரூபா கொடுத்து வாங்கிய புத்தம் புதிய சைக்கிள்கள் கூட இப்போது வெளியே பயணிப்பதை அவதானிக்க முடிகிறது.
மிகவும் கீழ் நோக்கி சென்றுகொண்டிருந்த சைக்கிள் பழுது பார்ப்பவர்களின் தொழில்முறை இப்போது, நிமிர்ந்து கொண்டு வருகிறது.
பல வருடங்களுக்கு முன்னர் பயன்படுத்திவிட்டு, மோட்டார் வாகனங்களின் மோகத்துக்குள் நுழைந்த பலர் அன்று சைக்கிளை வீட்டு கோடியில் தூக்கி எறிந்தனர்.
இன்று அந்த சைக்கிள்கள் எல்லாம் திருமணம் ஆகப்போகும் புது மாப்பிளை போல, பழுது பார்ப்பதற்காக சைக்கிள் திருத்தும் இடங்களில் குவிந்து உள்ளது.
இதுதவிர முன்னர் 15 ஆயிரம் முதல் 25 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட புதுச் சைக்கிள்கள், கடந்த ஆறு மாதத்துக்கு முன்னர் 65 ஆயிரம் என குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது அவை ஒரு லட்சம் ரூபா வரையில் விற்பனையாகிறது. ஆனாலும் சைக்கிளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிலர் பழைய சைக்கிள்களை திருத்தி, பயன்படுத்தி ஓடுகின்றனர்.
இன்னும் சிலர் இது தான் சந்தர்ப்பம் என்று 5 ஆயிரம் கூட பெறுமதி இல்லாத சைக்கிள்களை தண்ணீரிலும், எண்ணெய்யிலும் கழுவி ஒன்லைனில் 50 ஆயிரம் என்று விளம்பரம் செய்துள்ளனர்.
தங்கம் கூட இலகுவாக வாங்கவிடலாம். இந்த சைக்கிளுக்கு இப்படி மவுசு வரும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.
ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய நாளில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வரை செல்கிறது. ஒரு சைக்கிள் ஒரு லட்சம் ரூபா முதல் விற்பனையாகிறது.
இதனால் எதிர்காலத்தில் திருமணங்களின் போது வர தட்சணையாக சைக்கிள் வாங்கும் நிலை ஏற்படப்போகிறது. மேலும் யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் சைக்கிள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
இதனால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. எரிபொருளுக்கான பணமும் மீதப்படுத்தப்படுகிறது. என்றாலும் நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு சற்று தாமதமாக செல்ல நேரிடுவது சைக்கிள் பயணத்தின் குறையாக உள்ளது. என்றாலும் இப்போது சைக்கிள் திருட்டும் அதிகரித்துள்ளது.