பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்டதன் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செயற்பட்டுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை கொலை செய்வதே சஜித் பிரேதமாசவின் திட்டமாக இருந்தது என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற கடந்த 9 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் வைத்தியசாலையில் இருந்தாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு எரியூட்டும் நடவடிக்கையை அவர் செயற்படுத்தி இருக்கிறார் என்பது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் மூலம் தெளிவாகின்றன.
சஜித் பிரேமதாச வைத்தியசாலையில் இருந்துகொண்டு, ஒரு குழுவினர் ஊடாகவே இந்த மோசடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. அத்துடன் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை சேதப்படுத்த இவர்கள் செல்லவில்லை. மாறாக ரணில் விக்ரமசிங்கவை கொலை செய்வதே அவர்களின் திட்டமாகும்.
என்றாலும் அந்த நேரத்தில் ரணில் விக்ரமசிங்கவும் அவரது பாரியாரும் வீட்டில் இருக்கவில்லை. அதனால் அவர்கள் வீட்டை எரியூட்டி கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அத்துடன் சஜித் பிரேமதாசவின் கோரிக்கைக்கு அமைய செயற்பட்ட இவர்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் இருந்த தேஸ்டன் கல்லூரிக்கு அருகில் இருந்தே அனைத்து நடவடிக்கைகளையும் செயற்படுத்தி இருப்பது, வீடியோ பதிவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது.
என்றாலும் ரணில் விக்ரமசிங்கவை கொலை செய்வதே சஜித் பிரேமதாசவின் திட்டமாக இருந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.